SHARE

வலிகாமம் வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த 36 ஏக்கர் மக்களின் காணி இன்று (26) சனிக்கிழமை மக்கள் பாவனைக்கு விடுவிக்கப்பட்டது.

ஜே/233 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மாம்பிராய் , மாங்கொல்லை பகுதிகளைச் சேர்ந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணி மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்டன என்று தெல்லிப்பளை பிரதேச செயலர் தெரிவித்தார்.

எனினும் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையூடான மாங்கொல்லை காணியிலுள்ள வீடுகள் விடுவிக்கப்பட்டவில்லை. அவை தொடர்ந்தும் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரின் பாவனையிலேயே இருக்கின்றன. காங்கேசன்துறை செல்லப்பிள்ளையார் கோயில் பின்பகுதியூடாகவோ மாம்பிராய் உள் வீதியூடாகவோ விடுவிக்கப்பட்ட காணிக்குள் போக முடியும் என படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

“விடுவிக்கப்பட்ட காணிகளில் இப்பிலிப்பிலி மரங்கள் காடுகள் போல வளர்ந்துள்ளதால் மக்கள் தமது வீடுகளையோ ஒழுங்கைகளையோ இனங்காண முடியவில்லை. இராணுவத்தினர் பயன்படுத்திய தனியார் வீதியூடகவே போக முடிகிறது. அங்குள்ள வீடுகள் சில உடைக்கப்பட்டுள்ளன.

மாம்பிராய் காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டாலும் மாங்கொல்லை காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. இங்கிருந்த நரசிம்ம வைரவர் கோயில் இராணுவ வேலிக்குள்ளேயே உள்ளது.

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் ஊழியர்கள் தங்கும் விடுதியூடாக சீமெந்து தொழிற்சாலைக்கு நேராக கம்பி வேலி அடித்து விடுவித்திருந்தால் அனேகமான வீடுகள் விடுவிக்கப்பட்டிருக்கும். ஆனால் குறுக்கறுத்து மாங்கொல்லை உள் ஒழுங்கையூடாக இராணுவ முட்கம்பி வேலி அடிக்கப்பட்டதால் பல வீடுகள் வேலிக்குள் அகப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தமது சொந்த காணிகளை துப்புரவு செய்து மீள்குடியமர்வதற்கு வலி.வடக்கு பிரதேச செயலக மீள்குடியேற்ற செயலணி அதிகாரிகள் எமக்கு உதவிசெய்ய வேண்டும்” என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email