SHARE
வடமராட்சி கிழக்கு தாளையடி,மருதங்கேணி மற்றும் செம்பியன்பற்று பகுதிகளில்  சட்டவிரோதமாக மீன் பிடியில் ஈடுபட்டு வரும் தென்னிலங்கை மீனவர்களை அங்கிருந்து வெளியேற உள்ளுர் மீனவர்கள் இன்று  திங்கட்கிழமை வரை கால அவகாசம் வழங்கியுள்ளனர்.
வடமராட்சி கிழக்கின் கரையோரங்களை ஆக்கிரமித்து வரும் தென்னிலங்கை மீனவர் கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 100 க்கும் மேற்பட்ட வாடிகளை அமைத்துள்ளனர்.
அதேவேளை அட்டைபிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருவதுடன் 1000 க்கு மேற்பட்ட அவர்களது தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் அட்டை பிடிக்கும் வெளி மாவட்ட மீனவர்களின் அத்து மீறல் மற்றும் வாடிகள் அமைத்து தங்கு தொழிலை மேற்க்கொள்வதை எதிர்த்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டண ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
குறித்த கண்டண ஆர்ப்பாட்டத்தில் தென்னிலங்கை  மீனவரின் வாடிகளை முற்றுகையிட்ட வடமராட்சி கிழக்கு மீனவர்கள், இங்கு வந்து அட்டைத் தொழிலை மேற்கொள்வதால் தமது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சிறு தொழில் முதல் கரைவலைத் தொழில்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டியிருந்தனர்.
அந்தவகையில் இன்று திங்கட்கிழமை  மதிய நேத்திற்குள் அங்கிருந்து அவர்களை  வெளியேறுமாறு  காலக்கெடுவொன்றை விதித்துள்ளனர்.
முன்னைய காலங்களில் தாளையடி மற்றும் புதுமாத்தளன் பகுதியில் சில சிங்கள மீனவர்கள் நிரந்தரமாக மீன்பிடித்து தங்க முயற்சிசெய்திருந்த வேளை அப்பகுதி தமிழ் மக்களின் போராட்டத்தால் அகற்றப்பட்டிருந்தனர்.
தற்பொழுது மீண்டும் சிங்கள மீனவர்களின் ஆக்கிரப்பு தமிழ் மீனவர்களின் தொழிலுக்கு மட்டுமல்ல. கடற்கரை பிரதேசங்களும் அவர்களின் ஆளுகைக்குள் பறிபோய்விடும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
Print Friendly, PDF & Email