SHARE

செய்தியாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணம் நகரில் இன்றைய தினம் புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.ஊடகவியலாளர்களால் இன்றைய தினம் காலை 10 மணியளவில் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுப்பட்டது .

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சி.சிறிதரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மாகாண சபை உறுப்பினர்கள் க.விந்தன், சுகிர்தன், கஜதீபன், ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், மாநகர சபை உறுப்பினர்கள், மூத்த பத்திரிகையாளரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கனாமயில்நாதன், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் எனப் பலர் பங்கேற்றனர்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பேரணியாக வைத்தியசாலை வீதியூடாகச் சென்று மீண்டும் அதே வீதியூடாக பேருந்து நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்தடைந்தனர்.
“ஊடக குரலை நசுக்காதே – குற்றவாளிகளுக்கு தண்டனை கொடு, பொலிஸாரின் தாமதம் – வன்முறையாளரின் ஊக்கம் உள்ளிட்ட வாசகங்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

போராட்டத்தின் நிறைவில் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே ஆகியோரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்திலிருந்து இருந்து வெளிவரும் காலைக்கதிர் பத்திரிகையின் பிரதேச செய்தியாளரும் விநியோகஸ்தருமான செ.இராஜேந்திரன் மீது நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை அதிகாலை 10 பேர் கொண்ட இனம்தெரியாத கும்பலொன்று தாக்குதல் நடத்தி இருந்து. அதில் அந்தச் செய்தியாளர் படுகாயமடைந்திருத்தார்.

Print Friendly, PDF & Email