SHARE

“அத்துமீறியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற இயலாதவர்கள் அதுகுறித்து நாடளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேச இயலாதவர்கள் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளத்தேவையில்லை” என கூறி,  நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா ஆர்ப்பாட்டக்காரர்களால் வெளியேற்றப்பட்டார்.

வடமராட்சி கிழக்கில் அத்துமீறி சட்ட விரோத கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற வெளிமாவட்ட மீனவர்களை வெளியேற்றக் கோரி மாபெரும் பேரணியொன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாசத்தின் ஏற்பாட்டில் இன்று காலை இப் பேரணி நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா போராட்டம் ஆரம்பமான யாழ்ப்பாணம் கடற்தொழிலாளர் சம்மேளன வளாகத்திற்குள் உட்பிரவேசித்திருந்தார்.

இந்த நிலையில் மாவை சேனாதிராஜாவை அங்கு கூடியிருந்த பெருமளவான இளைஞர்களும், மீனவர்களும் ஒன்றிணைந்து வெளியேறுமாறு கூச்சலிட்டமையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

“அத்துமீறியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்ற இயலாதவர்கள் அதுகுறித்து நாடளுமன்றில் ஒரு வார்த்தை கூட பேச இயலாதவர்கள் மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ளத்தேவையில்லை”

“நீங்கள் அரசாங்கத்துடன் இணைந்து இதுவரை எங்களுக்குப் பெற்றுத் தந்தது என்ன?”, “இது மக்கள் போராட்டம்…அரசியலுக்கு இங்கு இடமில்லை…”,

என அங்கிருந்த இளைஞர்களாலும் மக்களாலும் அரசியல் வாதிகளை வெளியேறும்படி கூக்குரலிடப்பட்டது. இதனையடுத்து வளாகத்தைவிட்டு வெளியே வந்த சேனாதிராஜா தனது வாகனத்தில் ஏறி சென்றார்.

Print Friendly, PDF & Email