SHARE

– புலம்பெயர் அமைப்புக்களின் செயலின்மையே காரணம்: மனித உரிமை செயற்பாட்டாளர் கீத் குலசேகரம்! 

சட்டவிரோதமாக 10 ஆண்டுகளிற்கு மேல் பிரித்தானியாவில் வசித்துவரும் குடியேற்றவாசிகளுக்கு பொது  மன்னிப்பு வழங்கி அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை என பிரித்தானியா அரசு அறிவித்துள்ளது.

பிரித்தானிய பாராளுமன்று நோக்கிய இணைய கையெழுத்து போராட்டத்தை  செயல்படுத்திய மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் அவர்களுக்கு பிரித்தானிய அரசு அளித்த மின்னஞ்சல் வழியான பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரித்தானியாவில் இடம்பெற்ற “வின்ட்ரஸ்” விவகாரம் இரண்டாம் உலக யுத்தத்தின் போது குடியேறிய ஆபிரிக்க-கரிபியன் இன மக்களின் குடியுரிமைகள் பறிக்கப்படும் நிலையை ஏற்படுத்தியது. எனினும் இது தவறு என்பதை ஏற்றுக்கொண்டு பிரித்தானிய குடிவரவு அமைச்சர் அம்பரூட் பதவிவிலகியிருந்தார்.

பிரித்தானிய முன்னாள் உள்விவகார அமைச்சின் ஒழுங்கின்மை மற்றும் இனவிரோத செயற்பாடுகளே இதற்கு காரணம் என்பதும் அறியப்பட்டது.

இதனையடுத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக பிரித்தானியாவில் சட்டவிரோதமாக வசித்துவரும் குடியேற்றவாசிகளுக்கு பொதுமன்னிப்பு அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர் முன்வைத்திருந்தார். இதனை பிரித்தானிய பாராளுமன்றுக்கான கையெழுத்து போராட்டமாக இணைய தளம் மூலம் ஆரம்பித்து வைத்தார்.


இலங்கைத் தமிழர்கள் பலர் அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக தவித்து வருவதால் அவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமையும் என்ற அடிப்படையில் கீத் குலசேகரம் அவர்கள் இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தரும்படி பொது அமைப்புக்கள் மற்றும் அனைவரையும் கேட்டிருந்தார்.

ஜரோப்பிய ஒன்றியத்தினை விட்டு பிரித்தனியா வெளியேற வாக்களித்துள்ள நிலையில் தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்க அனைத்துக் கரங்களும் தேவை. எனவே, ஏற்கனவே குடியுரிமை பெறாது சட்டவிரோதமாக 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் நாட்டில் தங்கியிருப்போருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவேண்டும். அவ்வாறு அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் நாட்டில் வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கினை கொள்வார்கள். அதுமட்டுமல்லாது இதனால் வருமான வரி மற்றும் காப்புறுதியில் வருடத்திற்கு மேலதிகமாக ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு பல காரணங்கள் அடிப்படையில் மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டு பொதுமன்னிப்பு கோரி ஒரு இலட்சம் கையொப்பம் இணையவழியாக பெறப்பட்டு வருகின்றது. இதில் இங்கிலாந்து குடிமக்கள் அல்லது இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள் மாத்திரமே கையொப்பமிடமுடியும்.

எனினும் இதுவரையில் 36,785  கையொப்பங்கள் மட்டுமே இடப்பட்டுள்ளன.

இந்நிலையில் மின்னஞ்சல் வாயிலாக பதிலளித்துள்ள இற்கிலாந்து அரசு மற்றும் பாராளுமன்றம்; பொதுமன்னிப்பளிக்கும் திட்டம் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“10 ஆண்டுகளுக்கு மேலாக சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்களுக்கு சட்டபூர்வ குடியுரிமை வழங்கும் திட்டம் எதுவும் இல்லை. எமது குடிவரவுக் கொள்கைகள் சட்டபூர்வமான குடியெற்றக்காரர்களுக்கு நியாயமான நியமங்களை அடிப்படையாகக் கொண்டவை”.

“இங்கிலாந்தில் சட்டபூர்வமாக குடியேறியுள்ளவர்களையும் சட்டவிரோதமாக குடியேறியவர்களையும் நாம் வேறுபடுத்திப்பார்ப்பது அவசியம். சட்டவிரோதமாக இங்கு தங்கியிருப்பவர்கள் குடியுரிமை பெற விரும்புவது சரியான அணுகுமுறை என அரசு நம்பவில்லை. அவ்வாறு அவர்களிற்கு பொதுமன்னிப்பு வழங்கி குடியுரிமை வழங்கினால் அது சட்டவிரோத குடியேற்றத்தை மேலும் ஊக்கிவிப்பதாக அமையும். தவிர, தனிநபரையோ அல்லது குடும்பத்தையோ சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரும் கடத்தல்காரர்களிடம் கையளிக்க ஊக்குவிப்பாக கூட அமையும்”.

“அதேவேளை, குடும்பம் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது தனிமனித உரிமை அடிப்படையில் தங்குவதற்கான உரிமையை பெறுவதற்கு வழிகள் உள்ளன. அவர்கள் குடியுரிமை  விதிகளின் கீழ் விண்ணப்பித்து வழக்குகள் அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம்.

அதே நேரத்திரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு பலர் குடியேறியிருப்பதை நாம் அறிவோம். அவர்களிடம் குடியேற்ற நிலைமையை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இல்லை. இதனால் அவர்கள் தமது வேலைக்கான உரிமையை நிரூபிப்பதற்கும் சலுகைகளை பெறுவதிலும் சிரமங்களை எதிர்கொண்டார்கள்.  இந்நிலையில் அவர்கள் தமது ஆவனங்களைப் பெற உதவுவதற்கு அரசு உறுதிப்பாட்டை கொண்டுள்ளது” எனவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்த கீத் குலசேகரம் அவர்கள், இது ஒரு தற்காலிக பின்னடைவே தவிர தோல்வி அல்ல என்றும் ஒரு இலட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டால் குறித்த விடயம் தொடர்பில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்த முயற்சியை நாம் கைவிடாமல் தொடரவேண்டும் என கேட்டுக்கொண்டார். அகதிகள் நலனை முன்னெடுப்பதாக கூறிக்கொள்ளும் பல அமைப்புக்கள் இவ்வாறான முயற்சிகளை முன்னெடுப்பதை விட்டு தங்களை வாழவைக்கும் முயற்சிகளிலேயே முக்கியத்துவம் காட்டிவருகிறார்கள். அது மட்டுமல்லாது சட்டத்தரணிகள் மீது வீண் பழி சுமத்திவருவதுடன் அகதிகளுக்கு மேலும் பல இடர்களை ஏற்படுத்தி வருகிறார்கள்.

அவர்கள் உண்மையில் அகதிகள் மீது அக்கறை கொண்டவர்களாயின் இவ்வாறான முயற்சிகளை அவர்களே முன்னெடுத்து ஒரு இலட்சம் வாக்குகளை மிக இலகுவாக பெற்றுத்தர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த முயற்சியை முன்னைய அரசாங்கங்கள் மனிதவுரிமை அடிப்படையில் Legacy என்ற திட்டங்களை அறிமுகம் செய்து பலருக்கு குடியுரிமை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுபோல இந்த அரசும் பொது மன்னிப்பு வழங்கி நிரத்த வதிவுரிமை வழங்க முடியும்.

குறித்த இணையவாயிலான கையொப்பம் எதிர்வரும் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முடிவுக்கு வருகின்றது. இதற்கிடையில் இதில் ஒரு இலட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டால் குறித்த விடயம் தொடர்பில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்களும் இதில் பங்காளிகளாகி உங்கள் கையொப்பத்தை பதிவு செய்ய இங்கே அழுத்துங்கள்

Amnesty for illegal immigrants who have been in UK for 10 years

Print Friendly, PDF & Email