SHARE

யார் தன்னை ஆதரித்து நியமித்தார்கள் என்பதை மறந்து சித்தப்பிரமை பிடித்தவர்கள் போன்று ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதாக வடக மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு கைதடியிலுள்ள பேரவை சபா மண்டபத்தில் சபைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..

வடக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வளங்கள் சுரண்டப்பட்டு வருகின்றது. அதே நேரம் இங்கு வாழாத தென்னிலங்கை மக்கள் கொண்டு வந்து குடியேற்றப்பட்டு வருகின்றனர். அதற்கமைய செயலணிகளையும் உருவாக்கி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதனால் தமிழ் மக்கள் பல வழிகளிலும் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர். ஆகவே இங்கு தொடர்ந்தும் சிங்கள முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் தான் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட இருக்கின்றதென்ற கேள்வி எழுகின்றது.

அவ்வாறான செயற்பாட்டை அவர்கள் முன்னெடுத்தால் நாங்கள் என்ன செய்ய வேண்டுமென்பதை தீர்மானிக்க வேண்டி வரும்.

தமிழ் மக்கள் ஆதரித்து வாக்களித்து கொண்டு வந்த ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசே தமிழ் மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் மக்கள் நியமித்த ஐனாதிபதியே அதனை மறந்து சித்தப்பிரமை பிடித்தவர்கள் போன்று செயற்படுகின்றார்.

இவ்வாறான நிலையில் தொடர்ந்தும் தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான திட்டமிட்ட செயற்பாடுகள் முன்னெடுப்பதானது போராட்டப் பாதைக்கே எமது மக்களைத் தள்ளுவதாக அமையுமென சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email