SHARE

வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் சி.தவராசாவின் வீட்டு வாசலில் நேற்று வைக்கப்பட 7 ஆயிரம் ரூபா சில்லறைகள் நிறைந்த ‘பாவப்பட்ட பண’ ப்பையிலிருந்த 963 ரூபாய் பணத்தை காணவில்லை என யாழ்ப்பாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை கறுப்பு சட்டை போட்ட சிலரே நடத்தினார்கள் வடமாகாண சபை நடத்தவில்லை. அதனால் நான் வடமாகாண சபைக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தினை திருப்பி தர வேண்டும் என வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி. தவராசா சபையில் கோரி இருந்தார்.

இதனையடுத்து கிழக்கு பல்கலை கழக மாணவர்கள் , எதிர்க்கட்சி தலைவர் கோரிய பணத்தினை திருப்பி கொடுக்க ‘பாவப்பட்ட பணம்’ எனும் பெயரில் ஆளுக்கு ஒரு ரூபா வீதம் சேகரித்து நேற்றைய தினம் (13) வடமாகண சபைக்கு குறித்த பணத்தினை ஒரு பையினில் கொண்டுவந்த போது அவர்கள் அதனை ஏற்க மறுத்தனர்.

பின்னர்  “பாவப்பட்ட பணம் ” என எழுதப்பட்ட குறித்த பண பொதியினை கொக்குவிலில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் வீட்டுக்கு கொண்டு சென்ற மாணவர்கள் வீட்டு வாசலில் பண பொதியினை கட்டி விட்டு சென்றனர்.

இதனையடுத்து வீட்டு வாசலில் பொதி ஒன்று கட்டப்பட்டு உள்ளமையை கண்ட எதிர்கட்சி தலைவரின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களான பொலிசார், யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதனையடுத்து  அங்கு சென்ற பொலிசார் பொதியினை மீட்டு ஆராய்ந்த போது பொதியினுள் 6 ஆயிரத்து 37 ஒரு ரூபாய் குற்றிகள் மட்டுமே காணப்பட்டன என தெரிவித்தனர்.

7 ஆயிரம் ரூபா குறித்த பொதியினுள் உள்ளன என்ற போதிலும் மீதி 963 ரூபாவை காணவில்லை என தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email