SHARE

“யாழ்ப்பாணத்திலுள்ள தேசியப் பாடசாலைகளுக்கு 63 முகாமைத்துவ உதவியாளர்களுக்கு போலியான நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் போலியான கையோப்பமிட்டு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 3 இலட்சம் ரூபாவரை பணம் பெற்றே இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன”

இந்த தகவலை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

வடமராட்சி கரவெட்டி இந்து கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வுகூடத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளில் கல்விசாரா ஊழியர்களாக 63 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று இன்று காலை அறிந்துகொண்டேன்.

அதனையிட்டு நான் சந்தோசமடைந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர். அதனால் அவர் இந்த நியமனங்களை வழங்கியிருப்பார் என நினைத்தேன்.

ஆனால் அந்த நியமனங்கள் அனைத்தும் போலியானவை என நான் இப்போது அறிந்துகொண்டேன். போலியான ஆவணங்களை வழங்கி 63 பேருக்கு முகாமைத்துவ உதவியாளர் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ளவர்கள் யாரோ 3 -4 லட்சம் ரூபாவரை பணத்தைப் பெற்றுக்கொண்டு, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரின் பதவி முத்திரையிட்டு அவரது போலியான கையொப்பத்துடன் நியமனம் வழங்கியுள்ளார்கள் என்று கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு 17 பேர், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு 15 பேர், யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் பாடசாலைக்கு 7 பேர் என மொத்தமாக 63 பேருக்கு போலியான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் புன்னியவான் எங்கிருக்கிறாரோ தெரியாது. அவர் இன்று கோடீஸ்வரன் என்பதை மறந்திடக் கூடாது.

அந்தப் பணத்தில் கல்வி இராஜாங்க அமைச்சருக்கும் ஒரு பகுதி கொடுத்தது என்று யாரும் சொல்லிடக் கூடாது.

யாழ்ப்பாணத்தில் படித்தவர்கள் பலர் இருந்தாலும் ஏமாறுகிறார்கள்.இந்த ஏமாற்றும் இருக்கக் கூடாது” என்று கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email