SHARE

விடுதலைப்புலிகள் மீது ‘குற்றவியல் அமைப்பு’ எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்த சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

அதேவேளை, கட்டாய நிதி சேகரிப்பு மற்றும் மிரட்டிப் பணம் பறிப்பு என்பவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்களும்  விடுதலை செய்யப்பட்டனர்.

சுவிற்சர்லாந்து வரலாற்றில் பெரும் வழக்கென குறிப்பிடப்படும் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்கள் உட்பட தமிழ் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் மீது தொடுக்கப்பட்ட கட்டாய நிதி சேகரிப்பு மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற வழக்கின் இறுதித் தீர்ப்பு வழக்கு பெலின்சோனாவில் அமைந்துள்ள சுவிற்சர்லாந்து நடுவன் அரசின் குற்றவியல் நீதிமன்றில் இன்று நடைபெற்றது.

இந்நிலையில், விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என அறிவித்த நீதிமன்றம், விடுதலைப்புலிகள் அமைப்பு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குற்றவியல் அமைப்பாகவோ குற்றத்தை தூண்டும் அல்லது ஊக்குவிக்கும் அமைப்பாக இருந்ததற்கான ஆதராம் எதுவுமில்லையென தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அதேவேளை, சுவிஸ் அரச தரப்பு வழக்கறிஞர் இலங்கையிலும் சுவிசிலும் விடுதலைப்புலிகள் ஒரு குற்றவியல் அமைப்பு என திரட்டிச் சமர்ப்பித்த ஆதாரங்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தவிர, செயற்பாட்டாளர்கள் நால்வர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக்குற்றங்களிலிருந்தும் பூரணமாக விலக்கப்பட்டுள்ளனர். சிலர் மீது வங்கி மோசடி பற்றி அறிந்து உதவியமைக்காக தண்டப்பணமும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கக்கூடிய சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

Print Friendly, PDF & Email