SHARE

அமைச்சர் மனோ கணேசனின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் அமைச்சர் எழுதியிருப்பதாவது,

இந்து பிரதி அமைச்சர் சந்தடியில், அமைச்சரவையில் காத்திரமாக சுவாரசியமாக நடந்த இன்னொரு சம்பவம் மறந்து விட்டது.

மரணித்தோருக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற விவகாரம் பேசப்படும் போது, நான் இடைமறித்து, நிதியமைச்சர் மங்களவிடம் ஒன்றை சொன்னேன்.

“…யுத்தம் முடிந்து ஏறக்குறைய பத்து வருடங்கள் முடிந்து விட்டன. இன்னமும் இந்த காணாமல் போனோர் அலுவலக விசாரணைகளை நடத்தி கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே விரக்தியின் எல்லைக்கு போய்விட்ட இந்த மக்கள், இப்போது மீண்டும் அலைகழிக்கப்படுகிறார்கள். இந்த காணாமல் போனோர் கணக்கெடுப்புகள் எத்தனை முறை நடந்துவிட்டன?…”

“…எனவே இன்று விசாரணை / கணக்கெடுப்பு ஆகியவற்றுடன் சமாந்திரமாக, குடும்ப தலைவர்களை இழந்த பல்லாயிரம், கைம் பெண்களுக்கு, நிர்க்கதியாகிவிட்ட குழந்தைகள், முதியோருக்கு, கணிசமான நஷ்டஈட்டு தொகைகளை வழங்குங்கள். இது அவர்களது உறவுகளை மீண்டும் கொண்டு வராவிட்டாலும் கூட, அவர்களது வாழ்வாதாரங்களையாவது கொஞ்சம் தூக்கி நிறுத்தும்…”

“… இதை இழுத்துக்கொண்டே போனால், இன்னும் இரு வருடங்களில் எமது அரசு முடிவுக்கு வந்துவிடும். இதைக்கூட செய்ய முடியாமலேயே போய் விடும்…” என்றேன்.

அப்போது, “…இதை விரைவில் செய்வோம். ஆனால், என்ன,… எமது அரசு இத்துடன் முடிந்து விடுமென்று நீங்களே சொல்கிறீர்கள்…” என மங்கள சமரவீர என்னிடம் திருப்பி கேட்டார்.

“…இல்லை, நான் இருக்கும் அரசு, இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடரும். ஆனால், இந்த அரசின் இம்முறையிலான ஐந்து வருட ஆயுள் இன்னும் இரண்டு வருடத்தில் முடியப்போகிறதே..” என்று அவருக்கு நான் பதில் சொன்னேன்.

மங்கள என்னை பார்த்து சிரித்தார். அவர் அறிவாளி. நான் சொன்னது அவருக்கு புரிந்திருக்க வேண்டும்.

Print Friendly, PDF & Email