SHARE

காணாமல் போனோரின் குடும்பங்களை அலைக்கழிக்காமல் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் அவர்களை அலையவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. காணாமல் போனோரின் குடும்பங்களை மேலும் மேலும் அலைகழிக்காமல் கணிசமான தொகையொன்றை நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டுமென நிதியமைச்சர் மங்கள சமரவீரவிடம் அமைச்சர் மனோ கணேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

நஷ்டஈட்டு தொகை வழங்குவதால் காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வரமுடியாது. இழந்த உறவுகளுக்கு அது ஈடாகாது. ஆனால், இந்த கணிசமான நஷ்ட ஈட்டு கொடுப்பனவுகள் நிர்க்கதியான அந்த மக்களின் வாழ்நிலைமைகளை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும் என்றும் அமைச்சர் மனோ கணேசன் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் தெரிவித்துள்ளார்.

காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு சர்வதேச சமூகமும் உதவ காத்திருக்கின்றது. அதற்கு நாம் வழிவிட வேண்டும். இனியும் தாமதிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யுத்தம் முடிவடைந்து சுமார் பத்து வருடங்கள் நிறைவுற்றுள்ள நிலையில் இன்னமும் காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை மீண்டும் மீண்டும் நடத்தி, ஏற்கனவே விரக்தியின் எல்லைக்குப் போய்விட்ட மக்களை அலையவிடுவதில் எனக்கு உடன்பாடில்லை. காணாமல் போனோர் கணக்கெடுப்புகள் எத்தனை முறை நடந்துவிட்டன?

இன்று மீண்டும் நடைபெறும் கணக்கெடுப்புடன் அதற்கு சமாந்திரமாக, குடும்ப தலைவர்களை இழந்த பல்லாயிரம், பெண்களுக்கும், நிர்க்கதியாகிவிட்ட குழந்தைகளுக்கும், முதியோருக்கும், கணிசமான நஷ்டஈட்டு தொகைகள் வழங்க வேண்டும்.

நஷ்டஈட்டு வழங்கல் தொடர்பில் சர்வதேச சமூகம் உதவ தயாராக இருக்கிறது. ஆகவே இனியும் தாமதிக்க வேண்டாம். இதை இழுத்துக்கொண்டே போனால், இன்னும் இரு வருடங்களில் எமது அரசு முடிவுக்கு வந்து, இதைக்கூட செய்ய முடியாமலேயே போய் விடும் என்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிடம், அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை வெளிப்படையாக தொடர வேண்டும். அது கட்டாயத் தேவை. ஆனால், இந்த விசாரணை, கணக்கெடுப்பு ஆகியவற்றுடன் இணைந்ததாக கணிசமான நஷ்டஈட்டு தொகைகளை வழங்கப்பட வேண்டும். துன்பத்தின் கருவறைக்கே சென்றுவிட்ட இந்த குடும்ப உறவுகளை மீண்டும், மீண்டும் அழைத்து அழவிடுவதில் அர்த்தமில்லை.

இந்நாட்டில் வடகிழக்கில் இத்தகைய கைம்பெண்கள் சுமார் 70,000 பேருக்கு மேல் இருப்பது வரலாற்று கொடுமை. தங்கள் கணவன்மாரை இழந்த இவர்கள், கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, எந்த அளவு சவால் மிக்க வாழ்நிலைமைகளை சந்திக்கிறார்கள் என்பதை அரசாங்கம் கணக்கில் எடுக்க வேண்டும். அதேபோல் பிள்ளைகளை இழந்த வயதான பெற்றோர் இன்று பெரும் துன்பங்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களையும் கணக்கில் எடுக்க வேண்டும்.

சர்வதேச சமூகம் இந்த மக்களுக்கு உதவ காத்திருக்கின்றது. அதற்கு நாம் வழிவிட வேண்டும். இனியும் தாமதிக்க வேண்டாம். எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கப்பட்டாலும், அது காணாமல் போன உறவுகளை மீண்டும் கொண்டு வராது. அது அடிப்படை உண்மை. ஆனால், அது இந்த நிர்க்கதியாகிவிட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்தும் என நான் நம்புகிறேன் என்றும் அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email