SHARE

தாமரைக்கோபுரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த கிளிநொச்சி இளைஞனிற்கு 30 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தாமரைக்கோபுர கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் இந்த இழப்பீட்டை வழங்கியுள்ளன என இளைஞனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தாமரைக் கோபுர கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த கிளிநொச்சி அக்கராயன்குளத்தை சேர்ந்த கோணேஸ்வரன் நிதர்சன் கடந்த 8ம் திகதி தாமரைக்கோபுரத்தின் 16வது மாடியிலிருந்து தவறிவிழுந்து உயிரிழந்திருந்தார்.

சீன, இலங்கையை சேர்ந்த இரண்டு நிறுவனங்கள் தாமரைக்கோபுர கட்டுமானப்பணியில் ஈடுபட்டுள்ளன. உயிரிழந்த இளைஞனிற்கு அந்த நிறுவனங்கள் இணைந்து காப்புறுதி பணம் மற்றும் நிறுவன பங்களிப்பு என்பனவாக 30 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளன.

அந்த பணம் நிதர்சனின் இரண்டு சகோதரிகள் மற்றும் சகோதரனின் பெயரில் தலா பத்து இலட்சம் வீதம் நிலையான வைப்பாக வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

நிதர்சனின் குடும்பத்தினர் மீளக்குடியமர்ந்துள்ள நிலையில் இதுவரை இதுவரை அவர்களிற்கு வீட்டுத்திட்டமும் வழங்கப்பட்டிருக்கவில்லை.

நிதர்சனின் உடலை கிளிநொச்சிக்கு கொண்டு வருவதில், செஞ்சிலுவை சங்க வாகனத்தை வாடகைக்கு அமர்த்திய விவகாரத்தில் முன்னர் சர்ச்சை ஏற்பட்டதையும் குறிப்பிட்டிருந்தோம். இதையடுத்து, இதை ஏற்பாடு செய்த பிரதேசசபை உறுப்பினர், அந்த பகுதி பாதிரியார் ஒருவரே கட்டுமான நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டை பெற்று நிதி மோசடியில் ஈடுபட்டதாக பரபரப்பு குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தநிலையில், இழப்பீட்டை பெற்றுக்கொள்வதில் பாதிரியாரே தமக்கு உறுதுணையாக இருந்ததாக உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Print Friendly, PDF & Email