SHARE

மாணவிகளை பாலியல்ரீதியாக துன்புறுத்திய வட்டுக்கோட்டை ஆசிரியர் ஒருவர் கடந்த புதன்கிழமை (13) பொலிஸாரால் கைது செய்யப்பட்ட விடயம் பலரும் அறிந்ததே. அந்த ஆசிரியரை காப்பாற்ற கடுமையான முயற்சிகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும், மூன்று மாணவிகளும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் இருவர் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர் என்று மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என பொலிஸார் மன்றில் அறிவித்தனர்.

இதையடுத்து, ஆசிரியரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது.

ஆசிரியர் தரப்பில் பிரபல சட்டத்தரணிகள் வழக்கிற்காக அமர்த்தப்பட்டுள்ளனர். இலங்கை குற்றவியல் தண்டனை சட்டக்கோவையில் வன்புணர்வுக்கு மட்டுமே சாட்டுதல்கள் உள்ளதென அவர்கள் மன்றில் குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை எந்த திசையில் அவர்கள் நகர்த்தவுள்ளனர் என்பது, இதன்மூலம் வெளிப்படுகிறது. ஆசிரியர் அந்த மாணவிகளை பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கவில்லை, பாலியல் சீண்டல்களையே செய்தார், அது அவ்வளவு பாரதூரமான குற்றமல்ல என அவர்கள் வாதத்தை முன்வைக்கவிருப்பதாக அறிய முடிகிறது.

இந்த ஆசிரியரின் நடத்தை தொடர்பில் பாடசாலை நிர்வாகத்துக்கு பழைய மாணவர் சங்கம் அண்மைக்காலமாக எடுத்துக் கூறிவந்தது. பாடசாலையின் நிறைவேற்றுச் சபைக்கும் இந்த விடயம் கவனத்துக் கொண்டுவரப்பட்டிருந்தது.

எனினும் ஆசிரியருக்கு சார்பான தரப்புக்கள் இந்த விடயத்தில் தலையிட்டு, அவரைக் காப்பாற்றி வந்துள்ளன. ஆசிரியரைக் கைது செய்யப்போவதாக பாடசாலை அதிபருக்கு பொலிஸார் அறிவித்தல் வழங்கி பின்னரே, அவர் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். அதுவரை அதிபரும் அவரை பாதுகாத்து வந்துள்ளார்.

இந்த ஆசிரியர் தம்முடன் எப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து, மாணவிகள் பல அதிர்ச்சி வாக்குமூலமளித்துள்ளதாக அறிய முடிகிறது.

வெற்றிலை மென்றுவட்டு, துப்பலை தன் மீது துப்பினார் எனவும் அந்த அருவருப்பான செயலால் அவரை தள்ளிவிட்டதாகவும் ஒரு மாணவி வாக்குமூலமளித்துள்ளார் என அறியமுடிகின்றது.

தான் நடந்துகொள்ளும் விதம் பற்றி பெற்றோரிடமோ வேறு எவரிமோ கூறக்கூடாது. கூறினால் அனைவரையும் வீடு புகுந்து கொல்லுவேன் என மிரட்டினார் என்று மற்றொரு மாணவி பீதியுடன் வாக்குமூலமளித்துள்ளார்.

எனவே இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் உளவள ஆலோசனைக்கு உள்படுத்தப்படுவது கட்டாயமானதாகும். அதற்கு முன்னர் அவரை மீளவும் பாடசாலையில் இணைக்க, பாடசாலையின் முக்கிய புள்ளிகள் முயற்சிப்பதாக தெரிகிறது.

ஆசிரியர் உடனடியாக மீளவும் பாடசாலையில் இணைத்துக் கொள்ளப்படுவாராயின், பாதிக்கப்பட்ட மாணவிகளும் அதே பாடசாலையில் கல்வி பயில்வதால், அவர்கள் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
எனவே, இதையெல்லாம் கருத்தில் எடுத்தே, அடுத்த கட்ட முடிவுகளை எடுக்க வேண்டும்

Print Friendly, PDF & Email