SHARE

“600 பொலிஸாரைக் கொன்று குவித்த கருணாவுக்கு கட்சியில் துணைத் தலைவர் பதவியை வழங்கப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணம் வழங்கி, தமிழ் மக்கள் வாக்களிப்பது தடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளை அழித்த இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவை சிறையிலடைப்ட்டார். இவற்றை எல்லாம் செய்தவர்களே இன்று விஜயகலாவின் உரையைத் தூக்கிப்பிடித்துக் கூச்சலிடுகின்றனர்.”

இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,
மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியினர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டை நாடாளுமன்றில் முன்வைத்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் குழு முடிவெடுத்துள்ளது எனவும் அவர் சபையில் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் சர்ச்சைக்குரிய உரை தொடர்பில் அரசினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி நாடாளுமன்றத்தில் இன்று மாலை உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவற்றைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இராஜாங்க அமைச்சர் விஜயகலாவின் சர்ச்சைக்குரிய உரை குறித்து எனக்குத் தெரிவிக்கப்பட்ட பின்னர் அது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தேன். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் குழுவும் நேற்றுக் கூடியது.

காய்ச்சல் காரணமாக இராஜாங்க அமைச்சர் நேற்று யாழ்ப்பாணத்தில் இருந்தார். கொழும்பு வந்த பின்னர் என்னைச் சந்திக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். அவரைச் சந்தித்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசியலமைப்பை மீறும் வகையில் எவரேனும் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதில் நாம் உறுதியாகவே இருக்கின்றோம்.

முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டனர். உயிர்த் தியாகங்களையும் செய்தனர். எனினும், மக்களையும், நாடு பிளவுபடக்கூடாது என்ற கொள்கையிலிருந்த அரசியல் தலைவர்களைப் புலிகள் கொன்றனர்.

கூட்டு எதிரணியினர் நாடாளுமன்றத்தை முடக்கும் வகையில் நேற்று செயற்பட்டுள்ளனர். இவர்கள் யார்? 600 பொலிஸாரைக் கொன்ற கருணாவுக்கு கட்சியில் உப தலைவர் பதவியை வழங்கியவர்கள், பிரபாகரனுக்குப் பணம் வழங்கி ஜனாதிபதித் தேர்தலில் வென்றவர்கள், விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இராணுவத் தளபதியை சிறையிலடைத்தவர்கள். இவர்களுக்கு எப்படி விஜயகலாவின் உரை பற்றிப் பேசமுடியும்?

எனவே, இப்படியானவர்களுக்கு எதிராக சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் சபையைக் கொண்டுநடத்த விடமாட்டார்கள்.

“நியூயோர்க் ரைம்ஸ்’ பத்திரிகையில் வெளியான செய்தி குறித்த கதையை மூடிமறைக்கவே நாடாளுமன்றம் நேற்று திட்டமிட்டுக் குழப்பப்பட்டது – என்றார்.

Print Friendly, PDF & Email