Home சிறப்புச் செய்திகள் ”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்”

”கொள்கையின் பிரகாரம் ஐக்கியமாக நாம் தயார்”

1,639 views
0
SHARE

“கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள்
பிழைத்துவிட்டதை தலைமை ஏற்றுவிட்டது”

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் செயலாளர் நாயகமுமான சிவசக்தி ஆனந்தன் எமது ‘நமது ஈழ நாடு’ இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தமிழர்விடுதலைக் கூட்டணியில் உள்ளுராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிட்டிருந்த ஈ.பி.ஆர்.எல்.எப் அடுத்து வரும் தேர்தல்களை எவ்வாறு எதிர்கொள்ளவுள்ளது?

பதில்:- நாம் தேர்தலுக்காக கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை. இன்னும் சொல்லப்போனால் கூட்டமைப்பின் இருப்பைப் பற்றி கூட்டமைப்பின் பேச்சாளராகச் செயற்படுபவரே கேள்வி எழுப்பியுள்ளார். கூட்டமைப்பின் ஜனநாயகமற்ற அணுகுமுறையும் கூட்டமைப்பின் பெயரில் இருவர் மட்டுமே முடிவுகள் மேற்கொண்டு செயற்பட்டு வந்துள்ளனர். எமது கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டு, உதாசீனம் செய்யப்பட்டன.
மேலும் எமக்கிருந்த துருப்புச்சீட்டைச் சரியாகக் கையாண்டிருந்தால் ஓரளவிற்கேனும் பலன்களை அடைந்திருக்க முடியும்.

இவை அனைத்திற்கும் மேலாக அரசியல் யாப்பிற்கான இடைக்கால அறிக்கை என்பது முழுக்க முழுக்க மக்களின் ஆணைக்கு எதிராக அமைந்திருந்தது. இதனைச் சுட்டிக்காட்டியதன் விளைவாகவே நாம் அவர்களுக்கு வேண்டத்தகாதவர்களாகிவிட்டோம்.
இவை அனைத்தும் தேர்தலுக்காக தமது கட்சியின் சின்னத்தைக் கொடுத்ததற்காக தமிழரசுக் கட்சி எடுத்துக்கொண்ட மேலாதிக்கப் போக்கினாலேயே நடைபெற்றன.

எனவே நாம் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிடத் தயாரில்லை என்று தெரிவித்தோம்.
தேர்தல் அரசியலுக்கும் அப்பால் ஒரு பொதுவான கொள்கையின் அடிப்படையில் வேலைத்திட்டங்களை வகுத்து அதனை ஏற்றுக்கொள்பவர்களுடன் ஒரு இறுக்கமான கட்டமைப்பை ஏற்படுத்தி அதனூடாகவே தேர்தல்களை எதிர்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.

கேள்வி:- மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தி முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான அணி உருவாகின்றபோது தங்களுடைய கட்சி பங்கேற்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்புக்களை வெளியிடுகின்றதே?

பதில்:- தேர்தல் நேரத்தில் அதனைப் பார்த்துக்கொள்ளலாம். அதற்கு முன்னர் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர நடவடிக்கைகள் பிழைத்துவிட்டதை அதன் தலைவரே ஏற்றுக்கொண்டுவிட்டார்.

எனவே எமது மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடக்கம் அரசியல்தீர்வு வரை அனைத்தையும் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, களச் செயற்பாடுகளே தேர்தலுக்கான முன்னணியைத் தீர்மானிக்க முடியும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

கேள்வி:- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்.இற்கும் இடையில் முரண்பாடு வரக்காரணம் என்ன?

பதில்:– சில வேளைகளில் புரிந்துணர்விலும் தொடர்பாடல்களிலும் ஏற்படுகின்ற குறைபாடுகள் கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்துவிடுகின்றன. இவை தொடர்ந்தும் நீடிக்க வேண்டிய அவசியமில்லை. மக்கள் நலன்சார்ந்து அனைவரும் சிந்திப்போமாக இருந்தால் இவை ஒரு பொருட்டல்ல.

கேள்வி:- முதலமைச்சர் தலைமையிலான அணி உருவாகாத பட்சத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப்.தொடர்ந்தும் தமிழர் விடுதலைக்கூட்டணி தலைமையிலான கூட்டணியிலேயே நீடிக்குமா?

பதில்:- தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினை என்பது வெறுமனே தேர்தலோடு மட்டுப்படுத்தப்படுவதல்ல. அதனை எட்டுவதற்கு தேர்தலும் ஒரு களம் அவ்வளவுதான். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் ஐக்கிய முன்னணி குறித்து ஒருவரும் வலியுறுத்த வேண்டிய அவசியமில்லை. அது தானாகவே உருவாகிவிடும்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் மீண்டும் இணைவதற்கு சாத்தியம் உண்டா?

பதில்:- மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இன்றைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது. இதனை உணர்ந்த முதலமைச்சரும் கடந்த 24.06.2018 அன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நீதியரசர் பேசுகிறார் என்னும் நூல் வெளியீட்டில் ஐக்கியம் என்பது கொள்கை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆகவே, தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் நலன்சார்ந்து சிந்திக்க வேண்டும். அப்படி சிந்தித்தால் ஐக்கியம் என்பது தானாகவே ஏற்பட்டுவிடும்.

கேள்வி:- அவ்வாறு இணைவதென்றால் கூட்டமைப்பில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட வேண்டும்?

பதில்:- ஐக்கியம் என்பது கொள்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக வேண்டும். அங்கத்தவர்கள் அனைவரும் சமமாகக் கருதப்பட வேண்டும். வேலைகள் பகிர்ந்தளிக்கப்பட்டு கூட்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். முடிவெடுப்பதற்காக ஒன்று கூடலும் செயற்படுவதற்காகப் பிரிந்து செல்லுதலுமாக அமைய வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு பொதுவான யாப்பு இருக்க வேண்டும். உருவாகின்ற ஐக்கிய முன்னணி என்பது அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய பரந்து விரிந்த ஒரு குடையமைப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு உருவாக்கப்படுகின்ற அமைப்பானது பின்னர் கட்சி ரீதியாகச் செயற்படக்கூடாது. ஐக்கிய முன்னணிக்கென்று ஒரு பொதுச் சின்னம் இருக்க வேண்டும். சட்டவலு இருக்க வேண்டும். மக்களின் பிரச்சினைகளை வினைதிறனுடனும், பற்றுறுதியுடனும் அணுக வேண்டும். புதிய கோணத்தில் ஆக்கபூர்வமாகச் சிந்திக்கின்ற அனைவரையும் உள்ளீர்ப்பதாக அமைப்பு கட்டியெழுப்பப்படவேண்டும்.

சமூகததின் அனைத்து மட்டங்களையும் உள்ளடக்கக்கூடியதாகவும் அனைவருக்கும் பொறுப்புக்களைப் பிரித்துக்கொடுக்கக்கூடியதாகவும் ஒவ்வொரு அங்கமும் தனது நலன் சார்ந்தும் சமுதாய நலன் சார்ந்தும் சிந்தித்து செயற்படக் கூடியதாக இருக்க வேண்டும்.
உதாரணமாக கமக்கார அமைப்பை எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் இருக்கின்ற அதே நேரத்தில் இனப்பிரச்சினையும் இருக்கின்றது.

ஆகவே அவர்கள் இரண்டையும் சிந்தித்துச் செயற்படவேண்டும். பெண்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் தமது உரிமைகளையும் சமத்துவத்தையும் வென்றெடுப்பதற்காகக் குரல்கொடுக்கின்ற அதேவேளை, இனத்தின் உரிமைக்காகவும் குரல்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

இவ்வாறு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்ற அதேவேளை, தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காகவும் குரல்கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். உருவாகின்ற ஐக்கிய முன்னணி இவைகளுக்கு இடமளிப்பதாக இருக்க வேண்டும்.

கேள்வி:-பாராளுமன்றத்தில் உங்களை உரையாற்றுவதற்கு கூட்டமைப்பின் தலைமையால் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றீர்கள்? அதன் பின்னணியை பகிரங்கப்படுத்துங்கள்

பதில்:- புதிய அரசியல் யாப்பிற்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை குறித்து முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் விவாதித்து அதில் எட்டப்படும் முடிவுகளைப் பொறுத்து பின்னர் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் விவாதிக்கலாம் என்று தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டுமாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கூட்டமைப்பின் தலைவரிடம் கோரியிருந்தது.

ஆனால் திரு.சம்பந்தன் அவர்கள் எமது கோரிக்கையை நிராகரித்து பாராளுமன்றக் குழுவைக் கூட்டினார். வேண்டா விருப்பாக ஒரு மாலை வேளையில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தைக் கூட்டினார். ஒரு தேசிய இனத்தின் உரிமை சார்ந்த விடயத்தை முதலில் கட்சிகள் மட்டத்தில் கூடிப்பேசி ஆராய்ந்து கொள்கை முடிவை எடுத்து பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கலாம் என்பதே எமது கோரிக்கையாக இருந்தது.

தங்களது கட்சியின் சின்னத்தைத் தேர்தலுக்காகக் கொடுத்த ஒரே காரணத்திற்காக தங்களது கட்சிக்கு அதிக ஆசனங்களை ஒதுக்கிக்கொண்டு அதனூடாக அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டு அந்த பெரும்பான்மையைக் கொண்டு தனது முடிவுகளை ஏனையோர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே திரு.சம்பந்தனின் விருப்பமாகும்.

ஒரு அரசியல் கட்சி என்ற அடிப்படையிலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஸ்தாபகக் கட்சிகளில் ஒன்று என்பதன் காரணத்தினாலும், மக்களின் நலனில் அக்கறைகொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது என்பதினாலும், நாம் கொள்கை முடிவுகள் கட்சி மட்டத்தில் எடுக்கப்பட்டு அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று விரும்பினோம். பாராளுமன்றத்திற்கு வந்திருப்பவர்களில் பலர் அரசியல் முன் அனுபவம் இல்லாதவர்கள். இதற்கு முன்னர் அரசியல் கட்சிகளில் அங்கத்தவர்களாக இல்லாதிருந்தவர்கள்.

எனவே அவர்களுக்கு கொள்கை முடிவுகளை எடுப்பதில் சிரமங்கள் இருக்கும். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தத்தமது கட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள். ஒருங்கிணைப்புக்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் அனைவருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல.
ஆகவே கட்சியே கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும். இதனை தெரிவித்து நாம் நாடாளுமன்ற குழு கூட்டத்தைப் புறக்கணித்தோம். இதன் காரணமாகவே இன்றுவரை எனக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

Print Friendly