SHARE

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும் எதிராக கடந்த பெப்ரவரியில் நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டு வள்ளங்களை ஒழங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தால், பணிப்பாளர் தலைமை அதிபதியிடமிருந்து யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நீதிவான் நீதிமன்றால் குற்றத்தீர்ப்பளிக்கப்படும் இந்திய மீனவர் ஒவ்வொருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத் தண்டனையை அனுப்பவிக்கவேண்டும் என்பதுடன் அவர்கள் தொழிலில் ஈடுபட்ட படகு ஒன்றுக்கு 6 மில்லியன் ரூபா தண்டப் பணத்தைச் செலுத்தவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், புதிய சட்டத்தில் வழக்கு தாக்கல் செய்யபடுமிடத்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் அதிகாரம் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பணிப்பாளர் அதிபதிக்கு உண்டு.

குற்றத் தீர்ப்பளிக்கும் அதிகாரமும் நீதிவானுக்கு உண்டு. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் ஒரு மாதகாலத்துக்குள் நீதிவான் குற்றத்தீர்ப்பளிக்கவேண்டும்.

இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொழிலில் ஈடுபட்ட இரண்டு படகுகளும் கடற்படையினரால் மீட்கப்பட்டன.

இந்தச் சம்பவம் இன்று (5) வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும் யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் இன்று ஒப்படைக்கப்பட்டனர். அத்துடன், படகுகள் இரண்டும் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

மருத்துவ சோதனைக்கு பின்னர் இந்திய மீனவர்கள் 12 பேரும் ஊர்காவற்றுறை நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளால் முற்படுத்தப்பட்டனர்.

வழக்கை ஆராய்ந்த நீதிவான், இந்திய மீனவர்கள் 12 பேரையும் வரும் 12ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

சட்டப்பின்னணி

1979 ஆம் ஆண்டு 59 ஆம் இலக்கத்தின் கீழான வெளிநாட்டு கடற்தொழில் படகுகள் முறைப்படுத்தல் சட்டத்தில் திருத்தம் கடந்த பெப்ரவரி மாதம் திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்து மேற்கொள்ளப்படும் சட்டவிரோத கடல் சார் நடவடிக்கையை தடுப்பதுடன் இலங்கைக்கு உரித்தான கடற்பகுதியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்களை பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.

புதிய திருத்தத்தின் கீழ் கைப்பற்றப்படும் கடற்தொழில் படகுகளுக்கான தண்டப்பணம் அதிகரிக்கப்படடது.

இதுவரையில் நடைமுறையில் இருந்த 15 இலட்சம் ரூபா தண்டப்பணம் 175 மில்லின் ரூபா வரை அதிகரிக்கப்பட்டதுடன் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் கடற்தொழில் படகு கைப்பற்றப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்படும் என விதந்துரைக்கப்பட்டது.

கைப்பற்றப்படும் வெளிநாட்டு படகுகள் தொடர்பில் குறித்த நாட்டின் கவுன்சிலருக்கு விரைவாக கடற்றொழில் திணைக்களத்தினால் அறிவிக்கப்படல் வேண்டும்.

சட்ட விதிகளை நடைமுறைப்படுத்தும்போது கைப்பற்றப்படும் படகின் உரிமையாளர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டும்.

புதிய திருத்தத்திற்கு அமைவாக கைப்பற்றப்படும் படகின் அளவுக்கேற்ப 5 மில்லியன் முதல் 175 மில்லியன் ரூபா வரையில் தண்டப்பணம் விதிக்கமுடியும்.

அத்துடன் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசிக்கும் படகுகளுக்கு அதன் நீளத்துக்கு அமைவாக அனுமதிப்பத்திர கட்டணமாக 7 இலட்சத்து 50,000 ஆயிரம் ரூபாவில் இருந்து 150 மில்லியன் ரூபாய் வரை அறவிடப்படவேண்டும்.

Print Friendly, PDF & Email