SHARE

விளையாட்டுப் போட்டிகளில் தேசிய,சர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என வடக்கு மாகண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.

இன்று யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பித்துள்ள வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி நிகழ்ச்சிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

மாணவர்கள் மத்தியில் விளையாட்டுக்களை இரண்டாம் தர விடயமாக யாரும் பார்கக்கூடாது பெற்றோர்கள்,ஆசிரியர்கள்,அதிபர்கள் இந்த விடயத்தில் கரிசனையுடன் செயற்படவேண்டும் மாணவர்களுக்கு கல்வி எந்தளவுக்கு முக்கியமோ அந்தளவுக்கு விளையாட்டுக்களும் முக்கியம். ஒவ்வொரு மாணவனுக்கும் ஏதாவது ஒரு விளையாட்டில் ஊக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இந்த விடயத்தில் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்களை வழிப்படுத்த வேண்டும்.

எமது மாகாணத்தில் மாகாண,தேசிய மட்டங்களிலும் சர்வதேச மட்டத்திலும் சாதனை படைத்த மாணவர்களின் குடும்ப நிலைகளை எடுத்துப்பார்ப்போமானால் அவர்கள் அனைவரும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

ஆகவே அவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுடைய விளையாட்டுத்துறையை விட்டு வேறு துறைகளில் நாட்டம் காட்டுகின்றனர். இனி வரும் காலங்களில் அவ்வாறான நிலை இருக்கக்கூடாது. விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து தங்களை வளர்த்துக்கொண்டு நாட்டுக்கும்,எமது மாகாணத்திற்கும் எமது மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

விளையாட்டுப் போட்டிகளில் தேசிய,சர்வதேச சாதனையாளர்களின் எதிர்காலத்தை உத்தரவாதப்படுத்துவதற்கான நிகழ்ச்சித் திட்டங்களை நாங்கள் உரவாக்கிக்கொண்டிருக்கிறோம்.

படிப்படியாக அதனை செய்வோம். அந்த வகையிலே விளையாட்டுக்களில் ஈடுபடக்கூடிய மாணவர்களோ மாணவிகளோ மனவுறுதியோடும் எதிர்காலம் பற்றிய தன்னம்பிக்கையுடனும் விளையாட்டுத்துறையில் தங்களுடைய சாதனைகளை நிலை நாட்ட வேண்டும் என்றார்.

Print Friendly, PDF & Email