SHARE

எனக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து விடும் என்பதற்காக செயற்பாடுகளை முடக்கும் வடக்கு அரசியல் வாதிகள் பாதிக்கப்பட்டவர்களை மறந்துவிட்டு பொய்யுரைக்கின்றார்கள்

மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் அனந்தி சசிதரன் ‘நமது ஈழநாடு’ இணையத்திற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி

நேர்கண்டவர்: நம்மவன்

கேள்வி:- வடமாகாண சபையில் மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக பதவி வகிக்கும் நீங்கள் உங்களின் அமைச்சின் ஊடாக எத்தகைய செயற்பாடுகளை இதுவரையில் முன்னெடுத்துள்ளீர்கள்?

பதில்:- முதலாவதாக எனது அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதி போதமையாக உள்ளது. குறிப்பாக இந்த ஆண்டுக்கு 83 மில்லியன் ரூபாவே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி எம்மால் வினைத்திறனான ஒரு செயற்பாட்டினை முன்னெடுக்க முடியாதுள்ளது.

அதனை விடவும் எமது பிரதேசம் யுத்தப்பாதிப்புக்கு உள்ளான பிரதேசம் என்பது உலகறிந்த விடயம். எத்தனையோ உள்ளுர் , சர்வதேச நிறுவனங்களின் உதவிகள் கிடைக்கின்றன. இருப்பினும் எனது அமைச்சின் கீழ் காணப்படும் விடயதானங்கள் பாதிக்கப்பட்ட மக்களுடன் தொடர்பு பட்டவையாக காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் பதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளை நன்கறிந்த எனக்கு அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலைமையே காணப்படுகின்றது. அதற்கு நிதி பிரதான காரணமாக உள்ளது.

மேலும் இதனைவிடவும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகள், தேவைப்பாடுகள் தொடர்பாக தகவல்களை பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் சேகரிக்கின்றோம். காரணம் அரச அதிகாரிகளிடத்தில் அவை தொடர்பான தகவல்களை கோருகின்றபோது அவற்றை உடனடியாக பெற்றுக்கொடுப்பதில் அசமந்தமான போக்கினையே கொண்டிருக்கின்றார்கள். இதனால் நானும் சமுக நலனில் அக்கறை கொண்ட எனது சக உறவுகளும் இணைந்து கள ஆய்வுகள் மூலம் அத்தகைய தகவல்களை ஒன்று திரட்டி அவற்றினை விடயங்களுக்கு பொறுப்பான மத்திய அமைச்சர்களுக்கு அனுப்பி அது தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்கின்றபேதும் அவையும் இன்னமும் பாராமுகமாகவே இருக்கின்றனர்.

நேரடியாக கூறுவதானால் பதிக்கப்பட்ட மக்களுக்கு எனது அமைச்சு சார்ந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கின்ற அனைத்துக்கும் ஏதாவது ஒரு காரணத்தினைக் கூறி முட்டுக்கட்டை இடுக்கின்ற செயற்பாடுகள் மத்திய அரசாங்கத்தின் துணையுடன் மிகக் கச்சிதமான முன்னெடுக்கப்படுகின்றது. மக்களின் வலிகளை நன்கறிந்த அரச அதிகாரிகளும், அந்த மக்களின் ஆணைப்பெற்ற அரசியல்வாதிகளும் தமக்கு பெயர்கிடைத்து அதன்மூலம் அரசியல் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக எமது அமைச்சினால் முன்னெடுக்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் துணைபோகாமை மிகவும் கவலைக்குரிய விடயமாகின்றது.

கேள்வி:- எவ்வாறாயினும் அமைச்சர் என்ற அடிப்படையில் உங்களுடைய ஆளுகைக்கு உட்பட விடயதானங்களில் அதிகாரங்களை செலுத்த முடியுமல்லவா? அதனைப் பயன்படுத்தி எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளீர்கள்?

பதில்:- எனது ஆளகைக்கு உட்பட்டுள்ள திணைக்களங்களின் ஊடாக இயலுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை முழுமையாய அமையவில்லை. அதற்குரிய காரணங்களை நான் ஏற்கனவே குறிப்பிட்டு விட்டேன். அவ்வாறு இருக்கையில் எனது குறித்தொகுக்கப்பட்ட நிதியின் ஊடாக பல்வேறு உதவித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், முன்னாள் போராளிகள் போன்றோருக்கான கணிசமான பணிகள் இடம்பெறுகின்றன. அத்துடன் கூட்டுறவுதொடர்பான விடயங்களும் முன்னெடுத்து வருகின்றோம்.

அதேநேரம் எமது புலம்பெயர் உறவுகள் என்னுடன் தொடர்பு கொண்டு வழங்கி வருகின்ற உதவிகளையும் நேரடியாகவே பயனாளிகளிடத்தில் கையளித்து வருகின்றேன். கடந்த காலங்களைப் போன்று புலம்பெயர் உறவுகளின் பேருதவிகள் தொடர்ந்தும் கிடைக்க வேண்டும் எனக் கோருகின்றேன்.

அதனை விடவும் எமது தயாகத்தில் சிறுகைத்தொழில் முதலீடுகளை புலம்பெயர் உறவுகள் செய்வதற்கு முன்வருவார்களாயின் அது எமது மக்களின் நிரந்த வாழ்வியல் வருமானத்திற்கு ஆணிவேராக அமையும். அது தொடர்பில் புலம்பெயர் உறவுகள் அரசியல் விரும்பு வெறுப்புக்களுக்கு அப்பால் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகவுள்ளது.

கேள்வி:- அமைச்சராக இருக்கின்ற போதும் உங்களின் செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக கூறியுள்ளீர்கள்? வடக்கு மாகாண சபையின் ஒட்டுமொத்த அமைச்சர்களும் இதுதான் நிலைமையா? அல்லது நீங்கள் மட்டும் இலக்கு வைக்கப்படுகின்றீர்களா?

பதில்:- மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள், அசமந்தமான போக்குகள், புறக்கணிப்புக்கள், தான்தோன்றித்தனமான செயற்பாடுகள் வடமாகாண சபையின் அனைத்து அமைச்சுக்களையும் பாதிப்பதாகவே உள்ளன.

ஆனால் எனது விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பெரும்பான்மைக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரினதும் தலையீடுகளும் காரணமாக அமைந்திருக்கின்றன. அத்துடன் அரச அதிகாரிகளும் தமது தொழிலைப் பாதுகாப்பதற்காக இத்தகைய அரசியல்வாதிகளின் தாளத்திற்கு ஆடவேண்டியவர்களாகி விட்டனர்.

கேள்வி:- தாங்களும் கூட்டமைப்பின் அங்கத்தவராக இருக்கையில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் உங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்க காரணம் என்ன?

பதில்:- நான்காம் ஈழப்போரின் நேரடிச்சாட்சியமாகவும் வடக்கு மக்களின் இரண்டாவது மிகப்பெரும் ஆணைபெற்றவராகவும் வடக்கு மாகாணசபையில் நான் இருக்கின்றேன். ஏன்னிடத்தில் ஒழிப்பதற்கு எதுமில்லை. இறுதி யுத்தத்தில் நடைபெற்ற அனைத்து விடயங்களையும் அப்பயே பகிர்கின்றேன். நீதி கோருகின்றேன். எனது குடும்பத்திற்கும் நானே தலைமை தாங்குவதால் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வலிகள் உள்ளிட்ட அனைவரினதும் நிலைமைகளை நன்கு அறிவேன். அதற்காக குரல்கொடுக்கின்றேன். இயலுமான வரையில் அவர்களுக்கான உதவிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்கின்றென்.

தற்போது அமைச்சராக இருக்கின்றமையால் அத்தகைய செயற்பாட்டு ரீதியான முயற்சிகளில் என்னால் வெற்றிபெறுமிடத்து தமது அரசியல் இருப்புக்கு ஆபத்து வந்து விடும் என்று பலர் கருதுகின்றார்கள். ஆகவே தான் தமது அரசியல் ஆதாயத்துக்கான எனது செயற்பாடுகளை முடக்குவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றார்கள். இதனால் பாதிக்கப்படுவது எமது மக்களே என்பது அவர்களின் மூளைக்கு தெரியவில்லையா? இல்லை தெரிந்திருந்தும் தமக்கு தமது அரசியல் எதிர்காலமே முக்கியம் என்ற அடிப்படையில் செயற்படுகின்றார்களா? என்பது தெரியாது.

அதனைவிடவும் ஒரு பெண் அரசியல்வாதியாக நான் வினைத்திறனுடன் செயற்பட்டு விடக்கூடாது என்ற மனோநிலையும் சிலருக்கு உள்ளது. என்னைப்பொறுத்த வரையில் எனது அரசியல்பணியாக விருந்தாலும் சரி அமைச்சுப் பணியாகவிருந்தாலும் சரி பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் தான் நகர்ந்து செல்கின்றது. அதற்காக மனந்தளர்ந்து விடவில்லை. இவற்றுக்கு எதிராக எதிர்நீச்சல் போடுவதற்கான மனவலிமையை விடுதலைப்போராட்டம் கற்பித்திருக்கின்றது. அத்தோடு எனது மக்கள் எனக்கு வழங்கியுள்ள ஆணை துணை நிற்கின்றது.

கேள்வி:- இலங்கை தமிழரசுக்கட்சி தங்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்திருந்தது. அதன் தற்போதைய நிலைமை என்ன?

பதில்:- இலங்கை தமிழரசுக்கட்சி அது தொடர்பில் என்னிடத்தில் எத்தகைய விளக்கங்களையும் கோரவுமில்லை. அது தொடர்பில் எவ்விதமான அறிவிப்புக்களையும் விடுக்கவில்லை.அந்தக் கட்சியினர் தான் என்னை அரசியலில் பிரவேசிக்குமாறு அழைத்தனர். நாளைடைவில் என்மீது மக்கள் கொண்டிருந்த அன்பும் பாசத்தினையும் பார்த்து அவர்களுக்கு பொறுத்துக்கொள்ள முடியாது போய்விட்டது என்று தான் நினைக்கின்றேன். அதன் காரணத்தால் தான் வெவ்வேறு கோணங்களில் குற்றச்சாட்டுக்களை ஆதரமின்றி முன்வைத்தனர்.

கட்சி, கொள்கை, தலைமைத்துவம் அனைத்துமே மக்களை மையப்படுத்தியது. அதிலும் பாதிக்கப்பட்ட ஒரு சமுகத்தினை பிரதிநிதித்துவப்படு;த்தும் ஒரு கட்சி, எத்தனை தூரம் கொள்கையில் உறுதியாகவும் பற்றாகவும் இருக்க வேண்டும். உரிய கட்டமைப்புடன் செயற்பட வேண்டும். ஆனால் எமது தாயகத்தில் நடப்பதோ தலைகீழாக இருக்கின்றது. கூட்டமைப்பு என்ற பெயரை முன்னால் வைத்துக்கொண்டும் விடுதலைப்புலிகளின் தியாகத்தினை தேர்தல் காலங்களில் மட்டும் பயன்படுத்திக் கொண்டும் மக்களை வாக்களிக்கும் இயந்திரகங்களாகவே பார்க்கின்றார்கள்.

தேர்தல் மேடைகளாக இருக்கட்டும், பொது மேடைகளாக இருக்கட்டுக்கும், பாராளுமன்றமாக இருக்கட்டும் உறுப்பினர்களால் வெளியிடப்படும் வார்த்தைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் நேரெதிரான நிலைமைகளே காணப்படுகின்றன. என்னால் அவ்வாறு இரண்டை வேடந்தரிக்க முடியாது. ஆவ்வாறு தரித்து ஏகபோக அரசியல் வாழ்க்கைக்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை.

எனது கணவனையும் ஏனை எனது உறவுகளைப் போன்றே எனது கையால் இராணுவத்திடம் ஒப்படைத்திருக்கின்றேன். இன்று காணமல் போயுள்ள தமது உறவுகளை தேடும் ஏனை சொந்தங்கள் போன்றே நானும் எனது கணவரைத் தேடிக்கொண்டிருக்கின்றேன். ஷெல் மழைகளுக்கு மத்தியலும் துப்பாக்கி சன்னங்களுக்கு மத்தியிலும் நானும் மக்களோடு மக்களாக முள்ளிவாய்கால் ஊடாக பயணித்தே உயிர்பிழைத்தேன். அந்த தருணங்களில் மக்கள் பட்ட வலிகளை நேரில் பார்த்தவள் நான். எனக்கும் அதே வலிகள் ரணங்களாக உள்ளன. அவ்வாறு இருக்கையில் ஒரு அரசியல்வாதியாக மட்டும் கோலங்கொள்ள முடியாது.

நேரடியாகவும் வெளிப்படையாகவும் கருத்துக்களை கூற விளைகின்றபோது தான் எனது கட்சிக்கும் எனக்கும் இடையில் முரண்பாடுகள் எழுகின்றன. போலியாக நடிப்பதற்கே உந்துதல் அளிக்கின்றார்கள். அதற்கு என்னால் முடியாது. அதனை என்றும் செய்யப்போவதுமில்லை.

கேள்வி:- வடமாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடைதற்கு சொற்பகாலங்களே உள்ளன. டிசம்பரில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறான நிலையில் உங்களின் அரசியல் பயணம் எவ்வாறு அமையும்?

பதில்:- தற்போதைய சூழலில் வடமாகாண முதலமைச்சர் தலைமை ஏற்றால் கொள்கைரீதியான பற்றுறதியுடன் கூட்டணியொன்று அமைவதற்கு சாத்தியமான சூழல் இருக்கின்றன. அவ்வாறான நிலைமையொன்று ஏற்படும் பட்சத்தில் எனது இலக்கும் நோக்கமும் அத்தரப்பினருடன் இணைந்தாக இருக்கின்ற போது நிச்சயமாக அந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டால் பங்கேற்பதற்கு தயாராகவே உள்ளேன்.

அதேசமயம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தமிழரசுக்கட்சி எனக்கு வாய்ப்பு வழங்குமா இல்லையா என்பதை கூறமுடியாதுள்ளது. ஆவ்வாறு வாய்ப்பு வழங்கினாலும் கடந்த கால அனுபவங்களை வைத்து பார்க்கையில் அதனை மீள்பரிசீலனை செய்யவேண்டி நிலைக்குத் தான் தள்ளப்பட்டுள்ளேன். மேலும் தவறுகளே இழைக்காத என்மீது கட்சி சார்ந்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிக்கிடைக்கின்றது. இருப்பினும் எவ்விதமான அறிவிப்புக்களும் கிடைக்கவில்லை.

இவ்வாறெல்லாம் பல்வேறு நிலைமைகள் தற்போதுள்ளன. ஏவ்வாறாயினும் எனது மக்கள் எனக்கு கடந்த தேர்தலில் ஆணை வழங்கியுள்ளார்கள். அவர்களுக்கான சேவையில் ஈடுபட நானும் தீர்மானித்து விட்டே அரசியலில் பிரவேசித்தேன். ஆகவே எனது மக்களுக்கான சேவை பயணம் தொடரும் அது எவ்வாறு அமையும் என்பதை தற்போதைய சூழலில் கூறமுடியாது. அதற்கான காலம் இதுவல்ல. நிச்சயமாக அரசியலில் தொடர்ந்தும் ஈடுபடுவேன்.

கேள்வி:- வடக்கு மாகாணத்தில் மகளிர், மற்றும் சமுக சேவைகள் போன்ற விவகாரங்களுக்கான பொறுப்பு வாய்ந்த அமைச்சராக இருக்கின்றவர் என்ற அடிப்படையில் அண்மைக்காலமாக குடாநாடு உட்பட வடக்கில் சட்டம் ஒழுங்குக்கு அப்பாற்பட்டதொரு வகையிலான அச்சமான சூழல் ஏற்பட்டிருக்கின்றதே?

பதில்:- ஆம், உண்மைதான். வடக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினர் தங்கியுள்ளனர். இவர்களை விட பெரும்பான்மையினத்தினைச் சேர்ந்த பொலிஸார் கடற்படையினர், விமானப்படையினர் என தங்கியுள்ளனர். இவர்கள் தான் வடக்கு மாகாணத்தின் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பினைக் கொண்டிருப்பதாக மத்திய அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் இவர்கள் இருக்கின்றபோது தான் வடக்கில் வாள் வெட்டுகள் முதல் போதைப்பொருள் வருகை, சிறுமியர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுதல் என அனைத்து செயற்பாடுகளும் பட்டப்பகலிலேயே அரங்கேறும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.

வடக்கு கடல் உட்பட இலங்கையின் கடற்பரப்பினையே புலிகளின் 12இற்கும் மேற்பட்ட ஆயுதக்கப்பல்களை தாக்கியழித்து வெற்றிகொண்டதாக சொல்லிக்கொண்டிருக்கும் இலங்கை கடற்படையினரே தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் கேரளக்கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் எவ்வாறு நாட்டிற்குள் வருகின்றன என்றொரு கேள்வி இருக்கின்றது. இதற்கு பதிலளிக்க வேண்டியது கடற்படையினரே.

இவர்களைவிடவும் எமது மக்களின் நிலங்களை அபகரித்து அதில் நிரந்தரமாக அமர்ந்துகொண்டு வாழ்வாதார நிலங்களில் விவசாயம் முதல் அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு வரும் இராணுவம் பட்டப்பகலில் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடைபெறுகின்றபோது வேடிக்கை பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றது. முன்னாள் போராளிகள் எவருடனானவது கதைத்தால் அவர்களை சந்தேகக் கண்ணுடன் பின்தொடர்ந்து பார்க்கும் இராணுவமும் புலனாய்வாளர்களும் இந்த வாள் வெட்டுக் கும்பலை ஏன் கண்டறிய முடியாது உள்ளது.

மறுபக்கத்தில் வித்தியா முதல் ரெஜினா வரையில் பிஞ்சுகளை நாம் பறிகொடுத்து விட்டோம். இதனைவிடவும் பல்வேறு இளம் பெண்கள் கர்பிணிகளாகின்ற செய்திகளையும் அவர்களது குடும்பங்கள் அதனால் படுகின்ற வேதனைகளையும் நாள்தோறும் கேள்வியுற்றவாறே இருக்கின்றோம். உண்மையின் இந்த சிறுமியர் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும் அவை தொடர்பில் முறையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமையின் காரணத்தால் தான் இவ்வாறான நிலைமையொன்று தொடர்ச்சியாக நீடித்துக்கொண்டிருக்கின்றது.

ஆகவே தான் பொலிஸ் அதிகாரத்தினை மாகாணசபைக்கு வழங்குமாறு எமது முதலமைச்சர் உட்பட நாம் கோரிநிற்கின்றோம். பொலிஸ் அதிகாரத்தினை எம்மிடத்தில் வழங்குமிடத்து அதன் மூலம் இத்தகைய சமுக வரையறை மீறல்களை உரியவகையில் கட்டுப்படுத்தலாம் என்பது எமது நிலைப்பாடாகின்றது.

கேள்வி:- டெனிஸ்வரனால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு நீதிமன்று வழங்கிய உத்தரவின் காரணமாக வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றதல்லவா?

பதில்:- இந்த விடயம் சம்பந்தமாக முதலமைச்சர் உரிய பதிலளித்து விட்டார். ஆகவே அது தொடர்பில் நான் கருத்துக்களை தெரிவிப்பது பொருத்தமானதல்ல. எம்மைப்பொறுத்த வரையில் பதவிகள் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி எமது பேச்சும் செயற்பாடும் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதை கூறிவைக்க விரும்புகின்றேன்.

கேள்வி:- பதிக்கப்பட்ட தரப்பிற்கு நீதி கிடைக்கும் என்பதிலும் தமிழர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான அரசியல் தீர்வொன்று கிடைக்கும் என்பதிலும் நீங்கள் எத்தனை தூரம் நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்கள்?

பதில்:- பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி கிடைப்பதாயின் அது சர்வதேச நீதி விசாரணையொன்றின் மூலமாகவே சாத்தியமானதாக அமையும். எமது உறவுகளும் நாங்களும் காணமல் போனவர்களுக்காகவும், அரசியல் கைதிகளுக்காகவும், எமது வாழ்விடங்களுக்காகவும் வீதியோரங்களிலே போராட்டங்களை 500நாட்களை கடந்து முன்னெடுத்தாலும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று வந்த ஜனாதிபதி, பிரதமரே அல்லது எமது மக்களின் தேசிய அரசியல் பிரதிநிதிகளோ அது தொடர்பில் பெரியளவில் அக்களை செலுத்தியதாக இல்லை. பாராமுகமாகவே இருக்கின்ற நிலைமை தான் உள்ளது.

அதற்காக எமது போராட்டங்களை கைவிட்டு நாம் பின்னகரப்போவதில்லை. சர்வதேச சமுகம் இந்த இடத்தில் தெளிவானதொரு நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும். பிரதான கட்சிகள் இணைந்திருந்தாலும் சரி, பிரிந்திருந்தாலும் சரி அவர்கள் தமது சுயலாப அரசியலையே முன்னிலைப்படுத்திக்கொண்டுள்ளார்கள். பெரும்பான்மை மக்கள் மத்தியில் யார் அதீத சிங்கள பௌத்த தேசிய வாதிகள் என்பதை காட்டுவதற்கே முன்றியடித்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆகவே அவர்கள் ஒருபோதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை தரப்பபோவதுமில்லை. பொறுப்புக்கூறல் பொறிமுறையின் பிரகாரம் நீதியை வழங்கப்போவதுமில்லை என்பதே இறுதியானது. எனவே தான் நாங்கள் சர்வதேச சமுகத்தின் தலையீட்டினைக் கோருகின்றோம். இதற்கு புலம்பெயர் சமுகம் பாரிய ஒத்துழைப்பினை வழங்குகின்றது.

எனினும் எமது மக்களின் ஆணைபெற்றவர்கள் அரசாங்கத்திற்கு முண்டுகொடுக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதானது அனைத்தையும் பலவீனப்படுத்துவதாகவே உள்ளது. முண்டுகொடுப்பவர்களின் கருத்துக்களைத் தாண்டி சர்வதேச சமுகத்தினர் வடக்கிற்கு நேரடியாக வந்து கள நிலைமைகளை பார்வையிட வேண்டும். அதனடிப்படையில் ஒரு நாட்டின் இறைமை என்பதற்கு அப்பால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக உடனடியான தலையீட்டினைச் செய்யவேண்டும்.

அதற்கு தவறுகின்ற பட்சத்தில் சர்வதேச நாடுகளும் உரிமைக்காக போராடிய இனத்தினை ஏமாற்றி விட்டன என்ற வரலாற்றுப் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும். அதுமட்டுமன்றி உலக அரங்கில் ஜனநாயகம், மனிதாபிமானம், நீதி,நேர்மை பற்றி அதிகம் பேசுகின்ற சர்வதேச சமுகம் அது தொடர்பில் பேசுவதற்கே அருகதையற்ற நிலைமைக்கு தள்ளப்படும் ஆபாயமும் உள்ளது.

ஆகவே சர்வதேச சமுகம் எமது நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இனியும் காலம் தாழ்த்தாது காரியத்தில் இறங்வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதற்காக குரல்கொடுப்பதற்கும் ஒன்றுபட்டு உழைப்பதற்கும் என்றும் நான் தயாராகவே உள்ளேன்.

Print Friendly, PDF & Email