SHARE

இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்று கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர், சௌத்தேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் டட்றியை சந்தித்து பிரித்தானியா அரசுக்கு குறித்த விடயம் தொடர்பில் அழுத்தம் கொடுக்கக்கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் தகவல் நடுவத்தின் செயற்பாட்டாளர்களான நோபல் நவீந்திரன் டேவிட் மற்றும் பிரசாத் ராசரத்தினம் ஆகியோரே மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்து கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

பிரித்தானியாவிடமிருந்து தொடர்ச்சியாக ஆயுதக்கொள்வனவை மேற்கொண்டுவரும் இலங்கை அரசு தமிழ் மக்களுக்கெதிராக இன அழிப்பை இடைவிடாது மேற்கொண்டுவருகின்றது. இவ்வின அழிப்பின் பிரதான காரணியாக பிரித்தானியாவின் ஆயத விற்பனையே பின்னணியில் அமைந்துள்ளது. தவிர, இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவிருக்கும் போர்க்குற்ற விசாரணையை மழுங்கடிக்கும் ஒரு செயலாகவும்  இவ் ஆயுத விற்பனை அமைந்துள்ளது.

அந்தவகையில், பிரித்தானியா இலங்கைக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்தவும் இதனால் ஈழத்தமிழர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்படுவதினை சம்பத்தப்பட்ட அமைச்சுக்கு வலியுறுத்தவும் கோரி தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) ஏற்பாட்டில் அதன் உறுப்பினர்கள் செயற்பாட்டாளர்கள் இணைந்து சுமார் ஆறுமாத காலத்திற்கு மேலாக  பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து குறித்த விடயம் தொடர்பில் தெளிபடுத்தி கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், அண்மையில் சௌத்தேன்ட் தொகுதி ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் டட்றியை சந்தித்த மேற்படி செயற்பாட்டாளர்கள்,

மனித உரிமைகளை மீறும் எந்தவொரு நாட்டிற்கும் தாம் ஆயுதங்களை விற்பனை செய்வதில்லை என ஐக்கிய நாடுகளின் ஆயுத வர்த்தக ஒப்பந்தத்தில் 2013 ல் கைச்சாத்திட்ட பிரித்தானியா அதே ஆண்டு காலப்பகுதியில் இலங்கை அரசுக்கு 62 பில்லியன் பவுன்ட்ஸ் பெறுமதியான ஆயுதங்களை விற்பனை செய்திருந்தது என்பதை எடுத்து கூறினர்.

ஆதேவேளை, ஐ.நாவின் ஆயுத ஒப்பந்தத்தை மீறி இலங்கைக்கு எந்த அடிப்படையில் ஆயுதங்களை விற்பனை செய்கிறது? மற்றும் பிரித்தானியாவிடம் கொள்வனவு செய்யப்படும் ஆயுதங்கள் இலங்கையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது? என்பது தொடர்பில் யாதேனும் கண்காணிப்புகளை பிரித்தானிய அரசு செய்கிறதா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.

அந்தவகையில் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ், இவ் விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சுக்கு  அழுத்தம் கொடுப்பதாக உறுதியளித்ததுடன் பிரித்தானிய பாராளுமன்றத்தில் குறித்த விடயம் தொடர்பில் மிக விரைவில் வரவிருக்கும் விவாதத்தின் போது தாம் ஆதரவு தெரிவிப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

குறித்த சந்த்திப்பின் போது இலங்கை அரசின் போர்க்குற்ற மீறல் மற்றும் இரும்புக்கரம் ஓங்கிய இராணுவமயமாக்கல் குறித்த விபரண நூல் ஒன்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email