SHARE

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி,  இளைஞர்களை பொலிசார் தாக்கினார்கள் என இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை , இளைஞர்கள் தான் மோட்டார் சைக்கிளில் வந்து , பொலிசாருடன் மோதுண்டார்கள் என கோப்பாய் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

கொக்குவில் பொற்பதி பகுதியில் நேற்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கையில் ,

கொக்குவில் பொற்பதி வீதியை சேர்ந்த ஏ.டெனிஸ்வரன் (வயது 19) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவனான சுஜீவன் (வயது 16) ஆகிய இருவரும் வீட்டுக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் இளைஞர்களின் மோட்டார் சைக்கிளுக்கு குறுக்கே தமது மோட்டார் சைக்கிளை செலுத்தி மறித்தனர்.

அதன் போது மோட்டார் சைக்கிளில் ஒட்டி சென்ற இளைஞன் நிலைதடுமாறி பொலிசாரின் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளாகினர்.

விபத்தினால் மோட்டார் சைக்கிளில் ஓடிய இளைஞன் காலில் காயமடைந்ததுடன் , பின்னால் இருந்து சென்ற மாணவனும் சிறு காயங்களுக்கு உள்ளானான்.

அதனை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் விபத்துக்கு உள்ளான இளைஞன் மற்றும் மாணவன் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்கள்.

இருவரையும் நிலத்தில் விழுத்தி சப்பாத்துக்கால்களால் மிதித்து தாக்குதல் நடாத்தினார்கள். அவ்வேளை அங்கு கூடிய நாம் இளைஞனையும் மாணவனையும் பொலிசாரின் தாக்குதலில் இருந்து மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்துள்ளோம்.

பொலிசாரின் மூர்க்கத்தனமான தாக்குதலால் அவர்களின் முகம் மற்றும் கண் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு உள்ளன என உறவினர்கள் தெரிவித்தனர்.

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிசார் தெரிவிக்கையில் ,

யாழில். நடைபெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் திடீர் வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

அந்த வகையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை கொக்குவில் நேதாஜி சனசமூக நிலையத்திற்கு அருகில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.

அந்நேரம் , தலைக்கவசம் இன்றி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களை பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மறிக்க முற்பட்ட வேளை மோட்டார் சைக்கிளில் நிலை தடுமாறி,  மறித்த பொலிசார் மீது மோதி விபத்துக்கு உள்ளனார்கள்.

அதில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்களும் , அவர்களை மறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரான பண்டார மென்டிஸ் என்பவரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்கள் என தெரிவித்தனர்.

இளைஞர்களை பொலிசார் தாக்கினார்கள் எனும் குற்ற சாட்டை பொலிசார் மறுத்துள்ளனர்.

Print Friendly, PDF & Email