SHARE

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு சிறிலங்காவின் இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க நேற்று (07) அழைப்பு விடுத்தார்.

இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை தெளிவுபடுத்துவதற்காக 2009 இல் யுத்தம் முடிவடைந்தது முதல் வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களுடன் இலங்கை இராணுவம் மிக நெருக்கத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இலங்கை இராணுவத்தின் இச்செய்தி இம்மாத இறுதியில் நடத்தப்படவுள்ள ‘கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018’ இன் மூலம் தமிழ் டயஸ்போராவை சென்றடையுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

‘கொழும்பு பாதுகாப்பு செயலமர்வு 2018’ தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று பிற்பகல் இராணுவத் தளபதி தலைமையில் கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இதன்போது கேள்வி நேரத்தில் ஊடகவியலாளர்கள் முன்வைத்த வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழ் டயஸ்போராக்கள் அதிகமாக வெளிநாடுகளில் வசிக்கின்றனர். தனவந்தர்களான இவர்களிடம் சிறந்த வளங்கள் உள்ளன. இவர்களை வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்காக இங்கே முதலீடு செய்ய நாம் ஏன் அழைக்கக் கூடாது?,” என்றும் இச் செய்தியாளர் மாநாட்டில் இராணுவத் தளபதி கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் விரைவில் கூடவுள்ள கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பில் கூடிய அக்கறை செலுத்தப்படவுள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்துள்ளமை இலங்கை அரசு புலம்பெயர் தமிழர்களது பணத்தை மட்டும் இலக்கு வைப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

இதனிடையே இலங்கை அரசின் முகவர் அமைப்புக்கள் புலம்பெயர் தேசத்திலுள்ள பல அமைப்புக்களையும் உடைத்து அவர்களில் பலரையும் இலங்கைக்கு தருவித்துக்கொண்டிருக்கின்றன. அந்தவகையில் அண்மையில் கூட மஹிந்த ஆதரவு கும்பலொன்று வடக்கிற்கு வருகை தந்திருந்ததுடன் வடக்கு ஆளுநரை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email