SHARE

விடுதலைப்புலிகளின் பல புரட்சி பாடல்களுக்கு இசையமைத்தவரும்,  ஈழத்து இசை கலைஞருமான யாழ்.ரமணன் என அழைக்கப்படும் இராஜேந்திரன் இராஜேஸ்வரனின் மறைவுக்கு வடமாகாண ஆளூநர்   றெஜினோல்ட் குரே இரங்கல் தெரிவித்து ஊடகங்களுக்கு அறிக்கை விடுத்துள்ளார்.

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , 

நீதித்துறையில் மட்டுமல்ல இசைத்துறையிலும் ஊடகத்துறையும் சாதனை படைத்த அமரர் இராஜேந்திரன் இராஜேஸ்வரன் (ரமணன்) மரணமடைந்த செய்தி யாழ் குடாநாட்டினை மட்டுமல்ல உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் இசை ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆற்றியுள்ளது.

ஒரு மனிதன் ஒரு துறையினையே சரிவர கையாள்வதற்கு முடியாது உள்ள தற்போதய காலத்தில் கலைஞனாக, சட்டத்தரணியாக, ஊடகவியலாளராக மூன்று துறைகளிலும் செயலாற்றி “யாழ் ரமணன்” என்றால் உலகம் அறியும் வகையில் திகழ்ந்த ஒரு நல்ல மனிதனை தமிழ் சமூகம் இழந்து இருக்கின்றது.

ஏராளமான பாடல்களுக்கு இசை அமைத்த ரமணன் ராஜன்ஸ் இசைக்குழுவின் இயக்குனராக இருந்து வடமாகாணத்தின் பல பகுதிகளிலும் இசை நிகழ்ச்சிகளை நடாத்திய பெருமைக்கு உரியவர் இலங்கை இந்திய பிரபல்யமான கலைஞர்களுக்கு இசை அமைத்த பெருமையையும் அவரையே சாரும். சிறந்த கலைஞர்களை உருவாக்கிய பெருமைக்கு உரிய ரமணனின் இழப்பு கலைத்துறைக்கு பேரிழப்பாகும்.

வடமாகாண ஆளுநர் என்ற ரீதியில் மட்டுமல்ல நானும் ஒரு கலைஞன் என்ற வகையில் சக கலைஞனின் இழப்பினால் துயர் உற்று இருக்கும் அன்னாரின் குடும்பத்தினர், நண்பர்கள் இசைப்பிரியர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கின்றேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது.


Print Friendly, PDF & Email