SHARE

பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர் உதயராசா சாளின் விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை (11) காலை அவரது வீட்டுக்குச் சென்ற பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவினர் கொழும்பு, இரண்டாம் மாடிக்கு வருமாறு அழைப்பு துண்டினை  கையளித்துள்ளனர்.

அத்துடன் ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் உட்பட ஐவருக்கும் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், எதிர்வரும் 16 ஆம் திகதி ஆலய உறுப்பினர்கள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ள அதேவேளை இறுதியாக 22 ஆம் திகதி ஊடகவியலாளர் உ.சாளின் அழைக்கப்பட்டுள்ளார்.

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத் திருவிழா கடந்த யூன் மாதம் நடைபெற்றிருந்தது. இந்த திருவிழாவின் இறுதி நாளான பூங்காவான உற்சவத்தின் போது வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றினைத்து தமிழீழ வரைபடத்தை ஒத்த அலங்காரத்தில் அம்மன் வலம் வந்திருந்தார்.

இது தொடர்பிலேயே விசாரணைக்காக ஊடகவியலாளர் உட்பட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள், ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பூசகர் ஆகியோர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே குறித்த சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர், மானிப்பாய் மற்றும் யாழ்ப்பாணப் பொலிஸார் அத்தோடு கோப்பாய் இராணுவத்தினர் ஆகியோர் பல கட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் குறித்த பிரதேசத்தை சேர்ந்த மக்களையும் பல தடவைகள் பொலிஸ் நிலையங்களுக்கு அழைத்தும் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆலய நிர்வாகத்தில் குறித்த ஊடகவியலாளர் இல்லாத போதிலும், இவ்வாறன சம்பங்களை பயன்படுத்தி ஊடகங்களை மிரட்டும் நடவடிக்கைகளை மீளவும் அரசு திட்டமிட்ட வகையில் களமிறங்கியுள்ளது.

Print Friendly, PDF & Email