SHARE

நீர்வேலி  பிள்ளையார் கோவிலில் வைத்து இருவர் மீது  வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 3 மாதங்களின் பின்னர் இரண்டு பேர் நேற்று (14) கைது செய்யப்பட்டனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவில்  வைத்து மே 7ஆம் திகதி இளைஞர்கள் இருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்நடத்தப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த அப்புத்துரை கிரிசன் (வயது -23) என்ற இளைஞன் கழுத்தில் வெட்டுப்பட்டும் கிரிகேசன் (வயது -23) காலில் படுகாயமடைந்தனர்.  நீர்வேலி செம்பாட்டுப் பிள்ளையார் கோவிலுக்குள் வைத்தே அவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.

அவர்களின் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை கோவில் கிணற்றுக்குள் வாள்வெட்டுக் கும்பல் தூக்கி வீசியதுடன் ஒருவரின் கைபேசியை கோவிலுக்கு முன்பாக உள்ள தேங்காய் உடைக்கும் கல்லில் போட்டு கும்பல் உடைத்துமிருந்தது.

பொலிஸாரல் தேடப்பட்டுவரும் ஆவா குழுவின் முக்கியஸ்தர் வினோத் உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பலே இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டது என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இணுவிலைச் சேர்ந்த இளைஞர்கள் மூவர் கோப்பாய் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டனர். அவர்கள் மூவரும்  யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்ட போதும், சாட்சிகள் அடையாளம் காட்டவில்லை. மேலும் இருவர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் ஐவரும் ஒரு மாத காலத்துக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் வேறு இருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (14)  கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

24 மற்றும் 28 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் முன்னிலையில் இன்று மாலை முற்படுத்தப்பட்டனர்.

சந்தேகநபர்களை வரும் 23ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மேலதிக நீதிவான் உத்தரவிட்டார்.

Print Friendly, PDF & Email