SHARE

யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன்

நல்லூரின் பாரம்பரியத்தையே பின்பற்ற முடியாதவர்கள் எவ்வாறு ஒரு இனத்தின் பாரம்பரியத்தை முன்னகர்த்துவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ. பார்த்திபன் கேள்வி எழுப்பி உள்ளார்.

நல்லூர் முன் வீதியில் கடந்த இரு நாட்களாக இராணுவ வாகனத்தில் பெரியளவிலான LED தொலைக்காட்சி பொருத்தப்பட்டு , அதில் விளம்பரங்கள் திரையிடப்பட்டு உள்ளன. 
 
ஆலய வீதியில் இராணுவ வாகனத்தில் விளம்பரங்கள் காட்சிப்படுத்துவது தொடர்பில் ஆலயத்திற்கு செல்லும் பக்தர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தனர். 
அதற்கு விளக்கமளிக்கும் வகையில் உறுப்பினர் வ. பார்த்திபன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி அறிக்கையில் அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது. 
 
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , 

ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தனது LED திரையை நல்லூர்க் கோவில் முன்பாக உள்ள பருத்தித்துறை வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் நிறுவுவதற்கு அனுமதியினைப் பெற்றுக் கொண்டது. அத் தனியாரும் அதற்குரிய மாநகர சபைக் கட்டணமாகிய ரூபா26 570 ரூபாவினை யாழ்.மாநகர சபைக்குச் செலுத்தி அனுமதியினைப் பெற்றுக்கொண்டார்.

அவ் LED திரையும் இராணுவத்தினர் வந்து நிறுவினர். திருவிழா ஆரம்பமாவதற்கு முன்னர் ஏற்கனவே யாழ்.மாநகரசபையினால் கேள்வி கோரப்பட்டு எடுக்கப்பட்ட கடை ஒன்றும் தனியாருக்குச் சொந்தமான காணியில் அமைக்கப்பட்ட LED திரைக்கு முன்னால் அமைக்கப்பட்டது. அது குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் LED திரையை மறைத்தது.

இந்நிலையில் தான் பிரச்சனை ஆரம்பமானது . அப்பிரச்சினையின் முடிவாக அவ் LED திரையை கழட்டி வேறு இடத்தில் அமைக்குமாறும் அதனை கழட்டி பூட்டுவதற்குரிய செலவினை மாநகர சபை தருவதாகவும் கூறப்பட்டது. அத்துடன் யாழ். மாநகர சபையால் ஒரு இடமும் நேற்று ஒதுக்கப்பட்டடுது. அவ்விடத்தில் தான் இராணுவ வாகனத்துடன் கூடிய LED திரை தற்போது உள்ளது.

எனக்கு தெரிந்த மட்டில் நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் இராணுவ வாகனத்தில் ஒரு LED திரை காட்சிப்படுத்தப்பட்ட சம்பவம் இம்முறையே நடைபெற்றுள்ளது.

நல்லூர் ஒரு கோவில் என்பதற்கு அப்பால் அது யாழ்ப்பாணம் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழரினதும் அவர்களின் பண்பாட்டு பாராம்பரியங்களின் அடையாளம் . அந்தவகையில் அப்படிப்பட்ட ஒரு பாரம்பரிய பண்பாட்டு பெருவிழாவில் இவ் இராணுவ பிரசன்னம் தேவையானதா என்பதனையும் சம்மந்தப்பட்ட தரப்புகள் அலசி ஆரயவேண்டும்.

அதை விட இன்று நல்லூர் கேணியினுள் நடைபெற்றுக்கொண்டு இருந்த தீர்த்தத் திருவிழாவினை எந்த ஒரு அனுமதியுமின்றி Phantom ( Arial view) மூலம் படப்பிடிப்பு செய்ததனை நேரடியாக ஒளிப்பரப்புச் செய்த தொலைக்காட்சி நிறுவனங்களுள் இத் தொலைக்காட்சி நிறுவனமும் அடங்குகின்றது.

இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் நல்லூர் பெருந்திருவிழா காலத்தில் இது வேண்டும் என்றாலும் செய்ய முடியும் ஆனால் பல நிறுவனங்கள் நல்லூரின் பாரம்பரியம் அதன் நிர்வாக நடைமுறைகளுக்கு மதிப்பளித்துவருகின்ற நிலையில் குறித்த நிறுவனம் தனது தொழில் நுட்ப திறனைக் காட்டியிருப்பது சிறப்பானதா என்பதனை தங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன்.

நல்லூரின் பாரம்பரியத்தையே பின்பற்ற முடியாதவர்கள் எவ்வாறு ஒரு இனத்தின் பாரம்பரியத்தை முன்னகர்த்துவார்கள் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Print Friendly, PDF & Email