SHARE

கனகராஜன் குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தாக்குதலை கண்டித்து இன்று காலை கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில், கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிவில் உடையில் தம்மை தாக்கியதாக தெரிவித்து 14 வயது மாணவி உட்பட ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தை கண்டித்து கனகராஜன் குளம் பாடசாலைக்கு முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் பொறுப்பதிகாரியின் தாக்குதலுக்கு இலக்கான பாடசாலை மாணவர்களின் சக மாணவர்கள் ,  ஆசிரியர்கள் , அதிபர்  உட்பட பொதுமக்கள் பலர் ஒன்றிணைந்து குறித்த கண்டன போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
பின்னணி 
பொலிசாரின் தாக்குதலில் பே.வசந்தகுமார் (வயது 42) அவருடைய பிள்ளைகளான பிள்ளைகளான கிருபாகரன் (வயது 16), சர்மிளா (வயது 14) ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வசித்து வரும் குடும்பம், தமக்குச்  சொந்தமான காணியின் ஒரு துண்டை, ஹோட்டல் அமைத்து வியாபாரம் செய்வதற்கு நபர் ஒருவருக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளனர்.
தாவீது ஹோட்டல் என்னும் பெயரில் இயங்கி வரும் இந்த ஹோட்டல் நடத்துவதற்கான வாடகை உடன்படிக்கை கடந்த ஜனவரி மாதம் முடிவடைந்த நிலையில், இடத்தினை மீள வழங்காமையால் வவுனியா நீதிமன்றில் அந்த ஹோட்டல் உரிமையாளர் எதிராக வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஹோட்டலின் பின்புறமாகவுள்ள காணியில் அமைந்துள்ள கிணற்றில் இருந்து  காணி உரிமையாளர் தமது தோட்டத்திற்கு நீர் இறைத்துள்ளார்.
ஹோட்டலுக்கு நீர் இல்லாமையால் நீர் இறைக்க வேண்டாம் என தாவீது ஹோட்டல் உரிமையாளர் காணி உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
அதனை அவர் கவனத்தில் கொள்ளாமையால் சில நபர்களுடன் வந்து அநாகரிகமான வார்த்தை பிரயோகங்களைப் பயன்படுத்தி தாவீது ஹோட்டல் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக காணி உரிமையாளரின் மனைவி கூறியுள்ளார்.
வாக்குவாதத்தில் ஈடுபட்டு விட்டு சென்ற ஹோட்டல் உரிமையாளர், பொலிஸாரை வரவழைத்து விட்டு 10 நிமிடத்திற்குள் மீள வந்து தனது கணவரை வலிந்து சண்டைக்கு இழுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோட்டல் உரிமையாளர் காணி வேலியருகில் சென்ற போது, அங்கு சிவில் உடையில் வந்த கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணி உரிமையாளரை தாக்கியதாக அவரின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.
தடுக்க சென்ற அவரின் மகனையும் கழுத்தை நெரித்து தாக்கியுள்ளனர். காணி உரிமையாளரின் மனைவி கைக்குழந்தையுடன் தடுக்க சென்ற போது தள்ளி விழுத்தி கனகராயன்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தாக்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார்.
காணி உரிமையாளரின் மனைவியை பொலிஸார் தாக்குவதைக் கண்ட மகள் தடுக்க முற்பட்ட போது, அவரது வயிற்றில் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர். இதனால், சிறுமிக்கு இரத்தப் பேக்கு ஏற்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தை கண்டித்தே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
Print Friendly, PDF & Email