SHARE

-யாழ்.வலம்புரி பத்திரிகையின் அலுவலக செய்தியாளர் மிரட்டப்பட்டமைக்கு யாழ் மாநகர சபை உறுப்பினர் நிலாம் கண்டனம்

ஊடகங்களையும்  ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவது ஊடக சுதந்திரத்தை இல்லாமச்செய்யும் நடவடிக்கையாகும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் கே.எம் நிலாம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வெளியாகும் பத்திரிகை ஒன்றின் அலுவலக செய்தியாளர் ஒருவர் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக செயலாளர் என கூறித்திரியும் நபரால் மிரட்டப்பட்டமையை கண்டித்து மேற்கண்டவாறு கூறினார்.

அண்மைக்காலமாக யாழ்ப்பாண குடாநாட்டு ஊடகங்கள் மீது சில வங்குரோத்து அரசியல்வாதிகளும் அவர்களின் அல்லக்கைகளும் அச்சுறுத்தல்களை பல்வேறு வழிகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் தொடராகவே நேற்று வலம்புரி பத்திரிகை அலுவலக செய்தியார் ஒருவரை தொலைபேசியில் மிரட்டியதையும் குறித்த செய்தியாளர் தனது பாதுகாப்பிற்காக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையும் பார்க்கின்றோம்.ஏனெனில் ஊடகங்களின் உண்மை செய்திகளை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இவ்வாறானவர்களினால் தான் மக்களின் அபிவிருத்தி திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

அச்சுறுத்தல்கள் தொடர்வதனால் மக்களுக்கு சரியான தகவல்களை எடுத்து செல்ல ஊடகங்களால் முடிவதில்லை.தற்போதைய சூழ்நிலையில் எந்த தரப்பும் ஊடகங்களின் செய்திகளினால் ஏதாவது பாதிப்புகள் எதிர்கொண்டால் அதற்கான பல ஜனநாயக வழிமுறைகள் பல உள்ளன.

இதை விடுத்து காட்டுவாசிகள் போன்று நடந்து கொள்வதானது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.ஜனநாயக நாடுகளில் முக்கிய தூண்களில் ஒன்றாக உள்ள ஊடகம் மதிக்கப்பட வேண்டும்.ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட வேண்டும்.

இதை விடுத்து ஊடகங்களை அச்சுறுத்துவது அச்சு ஊடகங்களின் பிரதிகளை எரிப்பது ஊடகவியலாளர்களை மிரட்டி கேவலப்படுத்துவது எத்தரப்பினாலும் ஏற்க முடியாததாகும்.

தற்போதய அரசாங்கம் தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களையும் அறிய முக்கியத்துவம் கொடுத்துள்ளது எனவே இவ்வாறான கேவலமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை சம்பந்தப்பட்டவர்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

Print Friendly, PDF & Email