SHARE

இன்று விடுதலையாவேன்! நாளை விடுதலையாவேன்! என்ற நம்பிக்கையுடன் நான்கு சுவருக்குள் சுருண்டு கிடந்த அவர்கள் ஏமாற்றத்தின் எல்லையை எட்டிவிட்டார்கள். உண்ண மறுத்து மரணத்தின் விளிம்பில் விடுதலையை வேண்டி கம்பிகளிற்கு பின்னால் அவர்களின் போராட்டம் தொடர்கிறது.

ஆனால் வெளியே வழமை போல் ‘அரசியல் கைதிகள் விவகாரம்’ என்ற ஒற்றை சொல்லிலேயே எல்லாம் நடந்து கலைந்து செல்கிறது. வழமைபோல் அரசியல் வாதிகளின் உருக்கமான அறிக்கைகளும் நாடாளுமன்றில் பேச்சுக்களும் முன்னரைப்போன்றே காரசாரம் குறையாமல் வெளிவருகிறது.
மறுபக்கத்தில் வீதிகளில் உறவுகளின் ஆதரவுப்போராட்டம். அதிலும் தங்கள் வாக்கு வங்கியை நிரப்ப முட்டுப்படும் அரசியல் தலைகள் என அரசியல் கைதிகளின் விடுதலைப்போராட்டம் மீண்டும் வீதிக்கு வந்துள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு இடங்களிலிருந்து கைது செய்யப்பட்ட அவர்கள் காரணம் எதுவும் கூறப்படாதும் வழக்குகள் எதுவும் தொடரப்படாதும் சிறைக்கம்பிகளுக்குள்ளேயே அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

புனர்வாழ்வு அழித்தேனும் தங்களை விடுதலை செய்ய கோரி அவர்கள் முன்னரும் இவ்வாறு பல தடவைகள் சிறைச்சாலைகளுக்குள் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தியிருந்த போதிலும் அவர்களின் போராட்டத்தை நிறுத்த செய்யும் போது அரசியல் தலைமைகளால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையிலேயே அநுராதபுர சிறைச்சாலையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது வெறுமனனே சிறைக்குள் அடைபட்டு இருப்பர்களது பிரச்சினை மட்டுமல்ல. அவர்கள் சார்ந்த குடும்பம் உறவுகளினதும் பிரச்சினை. அரசியல் கைதிகளை தண்டிப்பதாக கூறிக்கொண்டு அவர்களுடன் சேர்த்து அவர்களின் குடும்பங்களும் தண்டிக்கப்படுவதை கஷ்டப்படுவதை யார் உணருவர்.

முன்னர் ஒருமுறை இதே போன்று அரசியல் கைதிகளின் போராட்டத்தின் போது அவர்களின் போராட்டத்தில் குறுக்கிட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்களுக்கான தீர்வை உடனடியாக பெற்றுதருவதாக வாக்குறுதி அளித்திருந்தமை இவ்வடத்தில் ஞாபகப்படுத்தவேண்டிய தேவை உள்ளது. அது மட்டுமல்லாது அன்று அவர் உங்களுக்கான தீர்வை பெற்றுதர முடியாவிட்டால் நானும் உங்களுடன் வந்து போராடுவேன் எனவும் கூறியிருந்தார்.

தமிழ் மக்களை முன்னிறுத்தி அரசியல் செய்யும் ஒவ்வொரு அரசியல் தலைமைகளும் அவர்களுடன் தான் போராட்டத்தில் நிற்கவேண்டும்.

உண்மையிலேயே இது தீர்க்கமுடியாததொரு பிரச்சினையா அல்லது இதற்கு தீர்வினை பெறும் வகையில் அரசாங்கத்தினை இறங்கிவரச் செய்ய முடியாதளவிற்கு தமிழ்த் தலைமைகள் பலவீனமாக இருக்கிறார்களா? அல்லதுபோனால் நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் என்ற வகையில் சம்பந்தரால் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியாதா?

நாட்டுக்குள் ஒரு எதிர்க்கட்சி தான் என்ற போதிலும் இலங்கையில் தற்போது இரு எதிர்க்கட்சிகள் இருகின்றன. அது வேறு கதை அதற்குள் நுழையவேண்டாம்.

தன் வலி உணரும் வரை அவன் பிறர் வலி உணரப்போவதில்லை என்பது போல் எமது தமிழ் தலைமைகளும் சிறையிலிருந்து போராடும் கைதிகளின் வலிகளை உணரப்போவதில்லை. அவர்களை வைத்து வெறுமனே தமது அரசியல் வியாபாரங்களைத்தான் நடத்தி வருகிறார்கள்.

நிதானமாகப் போகவேண்டும்/ அமைதி காக்க வேண்டும் / வரும் பொங்கலுக்குள் தீர்வு வரும்/ தீபாவழிக்குள் தீர்வு வரும் என்று கூறுவதை தவிர அவர்களிடம் கூறுவதற்கு எதுவுமில்லை.

இவ்வாறானெதொரு பின்னணியில் தான் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தரப்பினரும் தங்களது பிரச்சினைகளுக்காக தாங்களே போராட முயல்கிறார்கள். அதனைத்தவிர அவர்களின் முன்னாள் வேறு எந்த தெரிவும் இல்லை.

காணிகளைப் பறிகொடுத்த மக்கள் அதற்காக தெருவில் இறங்கிய பின்னர்தான் அவர்களின் பிரச்சினையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டது. அதேபோன்று அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருந்த போதுதான் அவர்கள் பக்கமாக அனைவரும் திரும்பினர். எனவே, இங்கு ஒரு விடயம் வெள்ளிப்படை. அதாவது, பாதிக்கப்பட்ட மக்கள் தங்களை நோக்கி மற்றவர்களை திருப்பாதவரையில் இங்கு எதுவுமே நடைபெறப் போவதில்லை. மீட்பர்கள் என்போர் அதுவரை ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பர்.

அரசியல் கைதிகளின் விவகாரத்தைப் பொறுத்தவரையில் ஏன் இந்த அசமந்தப் போக்கு. அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவருகிறது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்த போது அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு திட்டவட்டமாக தெரிவித்து விட்டதாக நீதி அமைச்சர் தலதா அத்துகோரள கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நடத்திய சந்திப்பின் போது, இதனை நான் தெளிவாக எடுத்துக் கூறினேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

அவ்வாறாயின் நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைத்திருக்கும் அந்தத் தமிழர்கள் யார்? இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த 11,400 போராளிகளுக்கு மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியிருந்தது. அவ்வாறாயின் இந்த 200 – 300 வரையான அரசியல் கைதிகளை விடுவிப்பதில் அப்படியென்ன ஆபத்து வந்துவிடப் போகிறது? தமிழ் அரசியல் தலைவர்களும் மூச்சுப்பிடித்து நாடாளுமன்றத்தில் பேசுகின்றனர். ஆனால், அரசாங்கமோ தொடர்ந்தும் கண்டுகொள்ளாமலேயே இருக்கிறது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழர் தலைமைகள் பல அரசாங்கத்திற்கு வேண்டிய அளவு விட்டுக்கொடுப்புக்களை செய்து வருகின்றனர். ஆனால் அரசாங்கமோ தமிழர் பிரச்சினைகளில் எந்தவொரு விட்டுக்கொடுப்புகளையும் செய்ததாக இல்லை. அதனை தட்டிக்கேட்ட நாதியற்ற மேய்பன்களைக் கொண்ட ஆடுகளாயே தமிழ் மக்கள் தற்போது உள்ளனர்.

தமிழ்த் தலைமைகளைப் பொறுத்தவரையில் குறிப்பா சம்பந்தனைப் பொறுத்தவரையில் அரசியல் தீர்வு ஒன்றையே இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதாக கூறிவருகிறார்கள். அதுவும் தேவையானதொன்றே. அதேவேளை மக்களின் அன்றாட பிரச்சினைகள் தொடர்பிலும் கவனிக்கவேண்டியது அவர்களின் கடமை.

அரசியல் கைதிகள் விடயத்தில் தடுத்து வைக்கப்பட்ட அவர்கள் மட்டும் தண்டனையை அனுபவிக்கவில்லை. வெளியிலே உள்ள அவர்களின் குடும்பம் மனைவி பிள்ளைகள் என உறவுகளும் தண்டனையையே அனுபவிக்கின்றனர் என்பதை நன்கு உணரவேண்டும்.

கூட்டமைப்பு ஒரு தேசிய இனத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான அரசியல் கூட்டு என்னும் வகையில் இந்தப் பிரச்சினைகளின் தார்ப்பரியத்தை நாட்டுக்குள் மட்டும் பேசிகொண்டு இருக்காது சர்வதேசத்தின் முன்னிலையிலும் தொடர்ச்சியாக எடுத்துச்சென்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். ஆனால் நல்லாட்சி அரசுக்கு முட்டுக்கொடுக்கும் செயற்பாடுகளையே மும்முரமாக செயல்படுத்துகிறார்கள்.

ஒரு விடயம் மட்டும் உண்மை. அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் கொடுக்காமல் எதனையுமே சாதிக்க முடியாது. இது பற்றி பேசினால் அரசாங்கம் சங்கடத்திற்குள்ளாகிவிடும்இ சிங்கள மக்கள் கோபித்துவிடுவார்கள் என்று நினைப்பவர்கள் தமிழ் மக்களின் அரசியலுக்கு தலைமை தாங்கினால் இந்த நிலைமை இப்படியே தொடரும். இப்படி அவ்வப்போது அரசியல் கைதிகள் பட்டினி கிடப்பதும் போராடுவதுமாக நீட்சிகண்டே செல்லும். இதில் எந்தவொரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை.

அந்தவகையில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டமும் ஒரேயொரு செய்தியை தான் கூறி நிற்கிறது. இனியும் விட்டுக்கொடுத்து பொறுமை காத்து பயனில்லை என்பதையே!

தமிழ் தலைமைகள் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசாங்கத்திடம் திட்டவட்டமான ஒரு முடிவினை பெற்றுத்தரவேண்டிய கட்டாய காலகட்டமிது. தற்போது மக்கள் தங்களின் பிரச்சினைகளுக்காக தாங்களே வீதிக்கு இறங்கத் தொடங்கிவிட்டார்கள். இனியும் தமிழ் அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியோ கால அவகாசம் வழங்கியோ பொறுமை காத்தோ எந்த பயனும் இல்லை என்பதை நன்கு உணர வேண்டும்.

அரசாங்கத்தின் விருப்பிற்கு பின்னால் இழுபட்டு செல்வதை முதலில் நிறுத்த வேண்டும். அவ்வாறு இழுபட்டு செல்வதாலேயே தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளின் போதும் அரசாங்கத்தின் விருப்பமே முதன்மையாக இருக்கிறது. மோத வேண்டிய அவிடயங்களில் இழுபட்டு செல்லும் தலைமைகளாகவே தமிழ் தலைமைகளின் தற்போதைய நிலை மாறிவிட்டது.

ஒன்றில் தீர்வு எட்டப்பட வேண்டும் அல்லது போனால் பிரச்சினைகளுடன் நிற்கவேண்டும். மாறாக வளைந்து கொடுப்பதில் பயனில்லை. ஆடுகளை ஓநாய் தின்னும் போது மேய்ப்பர்கள் உறங்குதல் ஆகாது. ஆடுகளுடன் கூடவே நிற்பவனே உண்மையான மேய்ப்பன் தலைவன்.

Print Friendly, PDF & Email