SHARE

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி தனி கட்சி ஒன்றை அமைப்பாராக இருந்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிப்பதற்கு நான் தயாராக இல்லை. என மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

வடமாகாணசபையின் இறுதி அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தனது நிறைவுரையை ஆற்றும்போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறி யுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

வெண்ணை திரண்டு வரும்போது தாழியை உடைப்பதற்கு நான் தயாராக இல்லை. அண்மையில் பருத்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் எதிர்கால அரசியலில் சிவாஜிலிங்கம் தன்னுடன் இணைந்து பயணிப்பார் என கூறியுள்ளார்.

இதே விடயத்தை நேரில் சந்திக்கும்போதும் கூட முதலமைச்சர் ஒருதடவை கூறினார். ஆனால் நான் அவருக்கு அப்போது கூறியதையே இப்போதும் கூறுகிறேன். தமிழ் மக்களுக்கு இப்போது தேவையானது அடுத்த முதலமைச்சரோ, மாகாணசபை உறுப்பினர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ அல்ல. தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றே சமகால இன்றியமையாத தேவையாகும்.

அந்த தேவையை 2 அல்லது 3 வருடங்களுக்குள் பெற்றுக் கொடுக்காவிட்டால் இந்த இனம் இந்த நாட்டில் நிரந்தர அடிமைகளாக மாற்றப்படும்.

ஆகவே நிரந்தர தீர்வு ஒன்றினை தமிழ் மக்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தனும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனும் இரட்டை குழல் துப்பாக்கி போல் இருக்கவேண்டும் என நான் முதலில் கூறியிருந்தேன்.

இப்போது கூறுகிறேன். தமிழ் மக்களுக்கு இரட்டை குழல் துப்பாக்கி போதுமானதல்ல. தமிழ் மக்களுக்கு இப்போது பல்குழல் பீரங்கி தேவையாக உள்ளது. அதற்காக நாங்கள் ஒற்றுமையை குலைக்காமல் ஒன்றாக இருக்கவேண்டும்.

ஆவே முதலமைச்சர் கூட்டமைப்பிலிருந்து விலகி தனியே பயணித்தால் முதலமைச்சருடன் இணைந்து பயணிக்க நான் தயாராக இல்லை என்றார்.

Print Friendly, PDF & Email