SHARE
– அரசாங்கம் எச்சரிக்கை

பாராளுமன்றம் எதிர்வரும் 14 ம் திகதி  கூட்டப்படும்  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக சபாநாயகர் செயற்படுவாராயின் அவருக்கு எதிராக நடவடிக்கைகளை அரசியலமைப்பு ரீதியில் அரசாங்கம் மேற்கொள்ளும்.

ஐக்கிய தேசிய கட்சியின் பங்காளியாக சபாநாயகர்  கரு ஜெயசூரிய  செயற்படுவதை விடுத்து  பதவிக்கு பொருந்தும் வகையில் செயற்பட வேண்டும்.  14 ஆம் திகதி பாராளுமன்றம் முறைப்படி கூட  ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அரசாங்க தரப்பு குறிப்பிட்டுள்ளது.

மன்றக் கல்லூரியில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  அமைச்சர் சரத் அமுனுகம, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ,  அமைச்சர் மஹிந்த சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்  திலங்க சுமதிபால  ஆகியோர் கலந்துக் கொண்டு மேற்கண்டவாறு   குறிப்பிட்டனர்.

அவர்கள் மேலும் குறிப்பிடுகையில்.

பாராளுமன்றம்   கூடும் தினம்  நிச்சயிக்கப்பட்டிருக்கும் தருவாயில் சபாநாயகர் அரசியலமைப்பிற்கு முரணாகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு  மாத்திரம் ஆதரவாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதாவது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினை நிரூபிக்கும் வரையில் கடந்த மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில்  காணப்பட்ட நிலைப்பாடுகள் மற்றும் பதவி நிலைகள் அவ்வாறே தொடரும்  எத்தரப்பினர் பெரும்பான்மையினை நிரூபிக்கின்றனரோ அவர்கள்  பாரம்பரிய கோட்பாடுகளுக்குட்பட்டு செயற்படலாம் என்று குறிப்பிட்டுள்ளமையானது முற்றுமுழுதும்  அரசியலமைப்பிற்கு முரணாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Print Friendly, PDF & Email