SHARE

இலங்கை நாடாளுமன்றம் சற்று முன்னர் அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் குழப்பத்திற்கு மத்தியிலேயே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று நள்ளிரவுடன் நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி (2019) புதிய நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்ட வர்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இலங்கை அரசியல் சூழலில் பெரும் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக நீக்கிய ஜனாதிபதி அப்பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்சவை நியமித்திருந்தார்.

ஆனால் குறித்த பதவிநீக்கம் உத்தியோகபூர்வமற்றது என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க தானே தொடர்ந்தும் பிரதமர் என அறிவித்தார்.

இதனால் கொழும்பு அரசியிலில் பெரும் குழப்பநிலை ஏற்பட இரு பிரதமர்களும் பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டிய நிலை உருவாகியிருந்தது.
ஆனால் ஜனாதிபதியினால் நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இதனையடுத்து நாடாளுமன்றத்தை கூடுமாறு சர்வதேச நாடுகளிடமிருந்து இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுவந்த நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடுவதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, தற்போது அரசியல் வாதிகளும் நாட்டுமககளும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் ஜனாதிபதி நாடாளுமன்றத்தை சற்று முன்னர் கலைத்துள்ளார்.

Print Friendly, PDF & Email