SHARE

இலங்கையின் சமகால அரசியல் விவகாரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் மாநில அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான Simon Hughes மற்றும் South wark  கவுன்சிலர் Eliza Mann ஆகியோருடன் பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் இளையோர் குழு விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

செயற்பாட்டாளர் கணேசலிங்கம் குகறூபனின் ஒழுங்குபடுத்தலில் Bermondsey யில் நேற்றைய தினம் நடைபெற்ற இச்சந்திப்பில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்கள அரசினால் மேற்கொள்ளப்பட்ட மற்றும் தொடரப்பட்டு வருகின்ற பிரச்சினைகளை பிரித்தானிய அரசாங்கத்தினூடாக எவ்வாறு தீர்வு காண்பது என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

விசேடமாக இலங்கையில் தற்பொது எழுந்துள்ள அரசியல் நெருக்கடி அதனால் தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகள், காணாமல் ஆக்கப்பட்டோர், காணி விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் பிரித்தானியாவில் இலங்கையின் தஞ்சக்கோரிக்கையாளர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினை, நிலைப்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்நிலையில் இதில் கருத்து தெரிவித்த Simon Hughes,

இலங்கையில் தற்போது எழுந்துள்ள அரசியல் குழப்பநிலை மிகவும் பாதிப்பு நிறைந்தது என்பதை தான் உணர்வதாகவும் இந்நிலை தொடர்ந்து நீடித்தால் அங்கு மேலும் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கவே வழிவகுக்கும் என்றார்.

மேலும், புகலிடக் கோரிக்கையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்துவதாக தெரிவித்த அவர் புகலிடக் கோரிக்கையாளர்கள் தமது பிரச்சினைகளை வெறுமனே எடுத்துக் கூறுவதோடு மட்டும் நின்றுவிடாது அது தொடர்பிலான ஆவணங்களையும் சமர்ப்பிக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, மேற்படி பிரச்சினைகள் தொடர்பில் தனது கட்சி சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் எட் டேவியுடன் கலந்துரையாடி அவர் ஊடாக பிரித்தானியாவின் வெளியிறவுத்துறை அமைச்சர், குடிவரவுத்துறை அமைச்சர் மற்றும் ஆசியாவிற்கான தலைமை அமைச்சர் ஆகியோருடன் விசேட சத்திப்பு ஒன்றை எதிர் வரும் டிசம்பர் மாதத்தில் குறித்த தமிழ் இளையோர் குழுவிற்கு ஏற்படுத்தி தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.

Print Friendly, PDF & Email