SHARE

முல்லைத்தீவு பொலிசார் இளைஞர்களிடம் கஞ்சா வாங்கி வருமாறு கோரிய போது அதனை மறுத்த மூன்று இளைஞர்கள் மீது பொலீசார் கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். 

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கையில் , 

முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் கடந்த 19ஆம் திகதி இரவு 09 மணியளவில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பொலீசார் எம்மை மறித்து , நீராவிப்பிட்டி பகுதியில் கஞ்சா விற்பதாகவும் , அங்கு சென்று கஞ்சா வாங்கி வருமாறும் எம்மை வற்புறுத்தினார்கள். 

அதற்கு நாம் மறுப்பு தெரிவிக்கவே எம்மை கைது செய்து முல்லைத்தீவு போலிஸ் நிலையம் கொண்டு சென்று எம்மை சித்திரவதை புரிந்து எம் மீது தாக்குதல் நடாத்தினார்கள். 

அதன் பின்னர் நாம் கள்ள சாராயம் விற்றோம் என எம்மீது பொய் குற்றசாட்டு சுமத்தி எம்மிடம் இருந்து வாக்கு மூலம் பெற்றதாக கையொப்பம் வாங்கி கொண்டார்கள். அதன் பின்னர் பொலிஸ் பிணையில் எம்மை விடுவித்து எதிர்வரும் 26ஆம் திகதி கள்ள சாராயம் விற்ற குற்றத்திற்காக முல்லைத்தீவு நீதிமன்றுக்கு வருமாறு கூறினார்கள். 

பொலிசாரின் தாக்குதல் மற்றும் சித்திரவதையால் பாதிக்கபட்ட நாம் மாஞ்சோலை வைத்திய சாலைக்கு சென்று சிகிச்சை பெற்றோம். அதன் போது எம்மில் ஒருவருக்கு மூக்கு மற்றும் காதால் இரத்தம் வந்தமையால் அவரை மேலதிக சிகிச்சைக்க வவுனியா வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்னர் என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர். 

Print Friendly, PDF & Email