SHARE

சொல்லினைத் தவிர செயலே மேன்மையானது என்பதன் மொத்த உருவமாக இயங்கிக்கொண்டிருந்த ரைவரமுத்து வரதகுமார் என்னும் அற்புத செயல் வீரனை தமிழ் சமூகம் இன்று இழந்துள்ளது.

பிரித்தானியாவை தளமாகக்கொண்டியங்கும் தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) இயக்குனரும் தமிழரின் விடுதலைக்காய் தன் வாழ் நாள் முழுவதையும் அர்ப்பணித்து செயலாற்றியவருமான திரு.வைரமுத்து வரதகுமார் கடந்த 13 ஆம் திகதி (13.03.2019) தனது மூச்சை நிறுத்திக்கொண்டார்.

அவரது திடீர் மரண செய்தியை எங்கள் இதயங்கள் ஏற்க மறுத்தபோதிலும் பிறருக்கொன வாழ்வை அர்ப்பணித்து செயலாற்றி வந்த நல் இதயம்கொண்டவரை இருதய நோய் காவுகொண்டமை துயர்நிறைந்ததே!

யுத்தத்தின் பின்னர் குழப்பமான மனநிலை கொண்டுள்ள தமிழ் சமூகத்தை அதிலிருந்து எவ்வாறு மீட்டு வருவது என்பதே அவரது நாளாந்த சிந்தனையும் செயலாகவும் இருந்தது. அதற்கான நகர்வுகளையே அவர் தான் தலைமைகொண்டிருந்த தமிழ் தகவல் நடுவத்தின் ஊடாகவும் அதற்கு அப்பாற்பட்டும் செயற்படுத்திக்கொண்டிருந்தார்.

வரதகுமார் அவர்களை அவரது இல்லத்தில் காண்பது அரிதென்றே சொல்லலாம். பிரித்தானியாவின் நோவிட்டன் எனும் இடத்தின்; அமைந்துள்ள தகவல் நடுவத்திலேயே (TIC) அவரை முழு நேரமும் காணமுடியும். மாணவர்கள், அராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், புகலிடக்கோரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், பல்வேறு அமைப்புக்கள் என அனைத்து தரப்பினரையும் அவர் அங்கு வரவேற்றார்.

தமிழர் வரலாறு சார்ந்த அனைத்தும் ஆவணப்படுத்தப்படவேண்டும் என்பது அவரது உயிர்த்துடிப்பாக இருந்தது. அவை சார்ந்த பல செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டுவந்தார். குறிப்பாக வரலாற்று நூல்கள் ஆவணங்கள் போன்றவற்றை சேகரித்து வந்தார். அந்தவகையில் TIC அலுவலகத்தில் அண்மையில் புதுப்பொலிவுடன் நுலகம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.

பிரித்தானியாவில் கல்வியைத் தொடர்வோர் தமது கற்றல் சார்ந்த ஆராய்ச்சிகளின் விடைகளைத்தேட TIC யின் நுலகத்தினைத்தேடி வருவதுமுண்டு.

இளம் தலைமுறையினரை செயற்படுத்துவதில் ஆவர்வம் கொண்ட அவர் இளைஞர்களுக்கான பல வழிகளை அமைத்துக்கொடுப்பதில் என்றும் பின்வாங்குவதில்லை. அவரிடம் செல்லும் இளையர்கள் ஆளுமை நிறைந்தவர்களாய் வெளிவருவார்கள். இளைஞர்களின் திறன் அறிந்து அதற்கான களம் அமைத்துக்கொடுப்பார்;. அதேவேளை TIC யின் பல நிகழ்வுகளை இளைஞர்களே முன்னின்று நடத்துவதை அவதானிக்கமுடியும்.

தமிழ் சமூகம் எவ்வாறான வளர்ச்சி நிலையை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதில் தெளிவுகொண்டிருந்த திரு. வரதகுமார் அதற்கான அணுகுமுறைகளை கையாள்வதில் வல்லவராக இருந்தார். வெறுமனே அரசியல் பாதைமட்டுமே பயணத்துக்கானது என்று நில்லாது கலை கலாச்சாரப் பாதைகளினூடாவும் மக்களை பயணிக்க வழிகள் ஏற்படுத்திகொடுத்தவண்ணம் இருந்தார்.

TIC பல நூல் வெளியீட்டு நிகழ்வுகள் கலை நிகழ்வுகள் மனித உரிமைகள் தின கொண்டாட்ட நிகழ்வுகள் தமிழர் உரிமைக்கான குரல் கொடுக்கும் நிகழ்வுகள் என பலவற்றை தொடச்து செயற்படுத்திவருகின்றது. ஆனால் இவை அனைத்திலும் திரு வரதகுமார் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் மற்றவர்களிக்கு வழிகளை ஏற்படுத்தி கொடுத்து கொண்டிருப்பார்.
இவ்வாறு தான் சார்ந்த தமிழ் இனத்தின் விடியலுக்காய் அயராது உழைத்த செயல் வீரரின் அளப்பெரும் பணிகளை பட்டியலிட்டுக்கொண்டே தொடரலாம்.

இதனிடையே தற்போது ஈழத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்களக்குடியேற்றங்கள் பௌத்த கோயில்கள் தொடர்பிலான ஒரு ஆவணப்படத்தினை தயாரிக்கும் முயற்சியில் அவர் அண்மையில் முற்றுமுழுதாக ஈடுபட்டிருந்தார். மறுபக்கத்தில் தமிழ் மீதான இன அழிப்பு தொடர்பிலான மாபெரும் கண்காட்சி ஒன்றினையும் பிரித்தானியாவில் நடத்துவதற்கான ஆயத்தவேலைகளில் ஈடுபட்டிருந்தார்.

இவைகள் தொடர்பில் எதிர்ப்பார்ப்புக்கள் அதிகரித்திருந்த வேளையில் இடைநடுவே அவரது பயணம் முடிவடைந்தமை ஏமாற்றமானதே!

தமிழ் சமூகம் தாண்டி உலகமெங்குமுள்ள பிறமொழி பேசும் மக்களிடமும் ”TIC வரதகுமார்” என்ற அடையாளத்தை அவர் ஏற்படுத்தியுள்ளார் என்றால் அவரது செயற்பாடுகளின் வெற்றியை வெளிப்படுத்துகின்றது.

செயலே சிறந்தது என தன் வாழ்நாள் முழுவதையும் தமிழ் மக்களுக்காக அர்ப்பணித்து ஓடிக்கொண்டிருந்த திரு.வரதகுமார் எம்மத்தியிலிருந்து மறைந்துவிடப்போவதில்லை. ஆவர் ஆற்றிச்சென்ற செயற்பாடுகளினூடாக எம்மிடையே வாழ்ந்துக்கொண்டிருப்பார்.

Print Friendly, PDF & Email