SHARE

தமிழின அழிப்பின் ஒரு அங்கமாகவே யாழ்.பொது நூலக எரிப்பானது அமைந்துள்ளதாக முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதன்போது குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சிவாஜிலிங்கம் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

”1981 ஆம் ஆண்டு இலங்கை ழுமுவதிலும் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல் நடத்தப்பட்டபோது யாழ்.மாவட்டத்துக்கான அபிவிருத்தி சபை தேர்தல் ஜுன் மாதம் 4 ஆம் திகதி நடத்தப்படவிருந்தது.

இதற்காக மே மாதம் 31 ஆம் திகதி தமிழர் விடுதலை கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் யாழ்.நகரில் நடைபெற்றது. அன்றைய தினம் பொலிஸாருக்கு எதிராக துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் காணப்பட்ட நாச்சியார் ஆலயம், கடைகள் ஆகியன பெரும்பான்மை இனத்தவரினால் தீயிடப்பட்டு அழிக்கப்பட்டது.

இருப்பினும் இவ்விடயங்கள் ஊடாக திருப்தியடையாத பெரும்பான்மையினத்தவர்கள் ஜுன் 1ஆம் திகதி அதிகாலை வேளையில் யாழ்.பொது நூலகத்துக்கும் தீ வைத்தனர்.

குறித்த தீயினால் 94ஆயிரத்துக்கு மேற்பட்ட அரியவகை நூல்கள், அரிய ஓலைச்சுவடிகள் ஆகியன தீக்கிரையாகின. ஆசியாவிலேயே மிகப்பெரிய நூல் நிலையம் தீக்கிரையாக்கப்பட்டு தமிழ் மக்களின் பண்பாட்டு படுகொலை இடம்பெற்றது.

ஆகவே தமிழின அழிப்பின் ஒரு பகுதியாகவே யாழ் பொது நூலகம் அழிக்கப்பட்டதை கருதுகிறோம்” என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Print Friendly, PDF & Email