SHARE

கல்முனை உண்ணாவிரதப் போராட்டத்தை விரைந்து முடிவுக்குக் கொண்டுவர தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை உடனடி நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் வட. மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிடின், இந்தப் போராட்டம் நாடளாவிய ரீதியில் பரவி கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சிவாஜிலிங்கம் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கிழக்கில் உண்ணாவிரத போராட்டம் 4ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இப்போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துவருவதுடன் இதற்கான தீர்வை விரைந்து எடுக்குமாறு வலியுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து மந்திர ஆலோசனையை நேற்று நடத்தியது. இதன்போது கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்தும் கோரிக்கையை பிரதமர் ஏற்றுக்கொண்டு இது குறித்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இதனிடையே, கல்முனை விவகாரத்தை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்து வந்தால், கல்முனையில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் வடக்கிலும் பரவி, நாடுமுழுவதும் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email