SHARE

ICPPG ஐ.நா.விடம் கோரிக்கை

இலங்கை இராணுவத்தின் புதிய தளபதியாக போர்க் குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக இன அழிப்பை தடுப்பதற்கும் வழக்கு தொடர்வதற்குமான சர்வதேச மையம் (ICPPG) கடும் கண்டணத்தை வெளியிட்டுள்ளது.

புதிய நியமனத்தை இலங்கை அரசு மீளப்பெறும்வரை ஐ.நா.வின் அமைதி காக்கும் படைப்பிரிவில் இலங்கை இராணுவத்தின் வீரர்களை இணைந்துக்கொள்ள வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபையிடம் ICPPG கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை இராணுவத்தளபதியாக செயலாற்றிவந்த மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய இராணுவத்தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவால் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சர்வதேச ரீதியாக பல்வேறு போர்க்குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள யுத்தக்குற்றவாளியான சவேந்திர சில்வாவின் இந்த புதிய நியமனம் குறித்து இன அழிப்பை தடுப்பதற்கும் அவற்குக்கு எதிராக வழக்கு தொடர்வதற்குமான சர்வதேச மையம் தனது அதிர்ப்தியையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

போர்க்குற்றவாளியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் அவரை யுத்தக்குற்றச்சாட்டுக்களிலிருந்து இலங்கை அரசு பாதுகாக்கிறது என குற்றம்சாட்டியுள்ளதுடன் அவரது பதவியை மீளப்பெறுமாறும் கோரியுள்ளது.

இது குறித்து ICPPG இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகிய குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான ஒருவர் நாட்டின் இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சிதரும் விடயமாக அமைந்துள்ளதுடன் நாட்டின் பாதுகாப்பு குறித்து கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தொடர்பில் போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு போதுமான ஆதாரங்களை காட்டும் 137 பக்கங்களை கொண்ட ஆவணக்கோவையை ITJP இந்த வருடம் ஜனவரியில் வெளியிட்டிருந்தது.

அந்தவகையில், சவேந்திர சில்வாவின் பதவி உயர்வானது நாடுமுழுவதும் அச்சத்தை ஏற்படுத்தும். குறிப்பாக இறுதி யுத்தத்தின் போது பொதுமக்கள் இருந்த இடங்கள் மீதான தாக்குதல்கள் சில்வா தலைமையில் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில் இறுதி யுத்தத்தில் பாரிய இழப்புக்களை சந்தித்த தமிழர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள போதிலும் தமிழர்கள் தொடர்ந்தும் ஆயுதப்படைகளுக்கு பயந்தே வாழகின்றனர். இன்றும் பலர் காணாமல் ஆக்கப்பட்டுக்கொண்டே வருகின்றனர். பலர் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சவேந்திர சில்லாவின் இந்த நியமனம் மேலும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 1948 முதல் தமிழர் மீதான தொடர் இன அழிப்பை மேற்கொண்டுவரும் இலங்கை அரசு இத்தகையை பின்னணி கொண்ட போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து வருவதுடன் சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு ஒத்துழைக்காதமையையும் பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது என ICPPG யின் பணிப்பாளர் அம்பிகை சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

போர் குற்றவாளியான சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து அமெரிக்கா மற்றும் ITJP உள்ளிட்ட பல்வேறு மனித உரிமைகள் அமைப்புக்கள் கண்டணம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ICPPG ஊடக அறிக்கை பின்வருமாறு

Print Friendly, PDF & Email