SHARE

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவம் (TIC) நடாத்தும் உலக மனித உரிமைகள் தினம்-2019 நிகழ்வு நாளை சனிக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ளது.

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய ஆண்டு நிறைவையிட்டு  மனித உரிமைகள் தினத்தை நினைவு கூருவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இன மக்களிற்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டு தோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடாத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நாளை சனிக்கிழமை (14)  RINITY HALL, EASTHAM, E12 6SG  எனும் இடத்தில் TIC யின் 2019 ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வு நடைபெறவுள்ளது.

மாலை 5 மணிக்கு ஆரம்பமாகும் இந் நிகழ்வில் உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து மனித உரிமைகள் தொடர்பிலான கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிரவுள்ள அதேவேளை மனித உரிமைகளை தழுவிய கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.

இதில் சிறப்பு விருந்தினர்களாக  Newham மேயர்  Rokhsana Fiaz மற்றும்  Eastham பாராளுமன்ற உறுப்பினர்  Stephen Timms MP   ஆகியோர் கலந்த சிறப்பிக்கவுள்ளனர்.

அதேவேளை இலங்கையிலும் கம்போடி நடைபெற்ற இனப்படுகொலைகள் அவற்றுக்கான தீர்வை பெறும் வழிகள் எனும் தலைப்பில் கம்போடியா இனப்படுகொலை ஆவணமையத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான  Dr Maung Zarni ,  சிரியாவின் ரோஜாவா புரட்சி மற்றும் பெண்ணியம் எனும் தலைப்பில் மானுடவியலாளரும் ( London School of Economics ) குர்திஷ் பெண்கள் இயக்கத்தின் ஆர்வலருமான  Elif Sarican,1984 இல் இந்தியாவில் நடைபெற்ற சீக்கிய படுகொலை  எனும் தலைப்பில் மனித உரிமைகள் ஆர்வலர்  Upkar Singh Rai ஆகியோர் விசேட உரைகள் நிகழ்த்தவுள்ளனர்.

அதேவேளை சாம் பிரதீபனின் நெறியாழ்கையில் உருவான ‘தோன்றாச் சுவர்’ எனும் மேடை நாடகமும்  Kshetre நடன நிறுவனத்தின் நடன நிகழ்வுகளும் ஆபிரிக்காவின் பாரம்பரிய நடனம் மற்றும் பறை இசை என பல்லின மக்களின் கலை நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது. தவிர மனித உரிமை ஆர்வலர்கள் சாதனையாளர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

தாயகத்தில் தற்போதும் தமிழ் மக்களுக்கு எதிராக தற்போதும் இடம்பெற்று வரும் அநீதிகள் அடிப்படை உரிமை மீறல்களை சர்வதேசத்தின் முன்னிலையில் வெளிக்கொணர சிறந்த தளமாக அமையவுள்ள இந்நிகழ்வில் புலம்பெயர் தேசத்தில் வாழும் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Print Friendly, PDF & Email