SHARE

தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களை பல்லின மக்களின் முன்னிலையில் நினைவுகூர்ந்து தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று நடைபெற்றது.

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய ஆண்டு நிறைவையிட்டு மனித உரிமைகள் தினத்தை நினைவு கூருவதோடு, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இன மக்களிற்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றிற்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யின் நடப்பு ஆண்டுக்கான மனித உரிமைகள் தின நிகழ்வு லண்டன் Eastham
இல் நேற்று (14) மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக Newham மேயர் Rokhsana Fiaz மற்றும் Eastham பாராளுமன்ற உறுப்பினர் Stephen Timms ஆகியோர் கலந்து கொண்டதுடன், உலகெங்கிலும் மனித உரிமைகளுக்காக குரல் கொடுத்த மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பல்லின மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடல் மற்றும் வரவேற்று நடனத்துடன் மாலை 6 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் தமிழ் தகவல் நடுவத்தின் முன்னாள் இயக்குனர் மறைந்த திரு.வரதகுமார் அவர்களுக்கானஅஞ்சலியும் அவர் குறித்த சிறப்பு காணொளி ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

தமிழர்களின் மனித உரிமைக்காகவும் தமிழுக்காகவும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளை அக்காணொளி சிறப்பாக கூறியிருந்தது.

தொடர்ந்து கம்போடியா இனப்படுகொலை ஆவணமையத்தின் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான Dr Maung Zarni  யினால் சிறப்புரை ஆற்றப்பட்டது. அதில் இலங்கையிலும் கம்போடியாவிலும் நடைபெற்ற இனப்படுகொலைகளின் ஒற்றுமை அந்த இனப்படுகொலைக்கான நீதியினை பெறும் வழி என்பது பற்றி அவர் பேசினார்.

தவிர, ‘நான் எப்போது தாய் வீடு போக முடியும்‘ எனும் தலைப்பில் லண்டன் SOAS பல்கலைக்கழகத்தின் தமிழ் ஒன்றியத்தின் தலைவர் வித்தியா நந்தகுமாரினால் கவிதை ஒன்றும் வழங்கப்பட்டது.

இதனையடுத்து நெருக்கடியான சூழ்நிலையிலும் மனித உரிமைக்காக உழைத்தவர்களுக்கான விருது வழங்கப்பட்டது. அந்தவகையில் வி.எம். விஜயபாலன் மற்றும் மறைந்த வண.பிதா. ஜேம்ஸ் பத்திநாதர் ஆகியோருக்கு மேயர் Rokhsana Fiaz யினால் விருதுகள் வழங்கப்பட்டன.

பிரதமர் விருந்தினரான பாராளுமன்ற உறுப்பினர்
Stephen Timms தனது உரையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது இனப்படுகொலையே என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் பாராளுமன்ற அமர்வின் போது அது குறித்து தான் குரல் எழுப்புவேன் எனவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே 1984 இல் இந்தியாவில் நடைபெற்ற சீக்கிய படுகொலை எனும் தலைப்பில் மனித உரிமைகள் ஆர்வலர் Upkar Singh னால் சிறப்புரை ஆற்றப்பட்டது.

இதனையடுத்து மறைந்த திரு.வரதகுமார் அவர்களின் ஞாபகார்த்த விருது தமிழ் தகவல் நடுவத்தின் ஆலோசர்களில் ஒருவரான Malcolm Rogers அவர்களுக்கு வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் TIC யின் செயற்பாட்டாளர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதேவேளை தமிழர்களின் பாரம்பரிய பறை இசை மற்றும் Swarup Memon னனின் தாண்டவஷ்தோத்திரம் என்ற நடனம் சாம் பிரதீபனின் நெறியாழ்கையில் உருவான தோன்றாச் சுவர் எனும் சிறப்பு மேடை நாடகம், ஆபிரிக்க கலைஞர்களின் ட்ரம் இசை ஆகியனவும் இந்நிகழ்வை அலங்கரித்திருந்தன.

Print Friendly, PDF & Email