SHARE

யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினால் யாருக்கும் தெரியாமல் ஒளிவு மறைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையினை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக இன்று (வெள்ளிக்கிழமை) காலை பௌத்த சின்னங்கள் அடங்கிய சிலைகள் வைப்பதற்கு சிறைச்சாலை நிர்வாகம் முயன்றபோதும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மேற்கொண்ட எதிர்ப்பின் காரணமாக அந்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, “தமிழ் பிரதேசங்களில் இவ்வாறு யாருக்கும் தெரியாமல் பௌத்த சின்னங்களை இரவோடு இரவாக வைப்பதற்கு சிறைச்சாலை நிர்வாகம் எடுத்த முயற்சியினை ஏற்றுக்கொள்ள முடியாது.

இது நிறுத்தப்பட வேண்டிய விடயம். எனவே இது தொடர்பாக நான் சிறைச்சாலை ஆணையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட நிதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

குறிப்பாக தமிழர் பிரதேசங்களில் இவ்வாறான செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது எமது நீண்டகால கோரிக்கை.

அத்தோடு இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநருடன் நான் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, இதனை நிரந்தரமாக நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளேன்” என மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email