SHARE

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நடத்திய போராட்டத்தினால் கிளிநொச்சியே கண்ணீரில் மூழ்கியது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால், இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சியில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகியது.

கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில் வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல்வாதிகள், பொது அமைப்புக்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.

கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகிய ஆர்ப்பாட்ட பேரணி, காக்கா கடை சந்திவரை சென்று மீண்டும் ஏ9 வீதி வழியாக கந்தசாமி கோயிலை வந்தடைந்தது.

அதனைத் தொடந்து அங்கு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கண்ணீர் மல்க தமது ஆதங்கங்களை வெளியிட்டனர்.

இந்த போராட்டத்திற்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் பங்கு கொண்டனர்.

கடத்தப்பட்ட, கையளிக்கப்பட்ட மற்றும் சரணடைந்த தமது உறவுகள் எங்கே? அவர்களின் உண்மை நிலையை வெளிப்படுத்துங்கள், சர்வதேசமே எமது உறவுகள் தொடர்பாக உண்மையை கண்டறியுங்கள் என வலியுறுத்தி குறித்த போராட்டம் இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.

Print Friendly, PDF & Email