SHARE

பிரியங்கா பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றினால் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து இலங்கை அரசு மேன்முறையீடு செய்துள்ளதாக, இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச மையம் (ICPPG) அறிவித்துள்ளது. 

கடந்த 2018 ஆம் ஆண்டு புலம்பெயர் தமிழர்களை பார்த்து கழுத்தை அறுப்பது போன்று செய்கை காண்பித்த இலங்கை தூதரகத்தின் அப்போதைய  பாதுகாப்பு அதிகாரியான பிரியங்கா பெர்னாண்டோவிற்கு எதிராக ICPPG யினால் தொடரப்பட்ட வழக்கில், பிரியங்கா பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்த வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றம் அவருக்கு எதிராக அபராதமும் விதித்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 6  ஆம் திகதி நடைபெற்ற இறுதி வழக்கில் பொது ஒழுங்குச் சட்டம் ( Public order) 1986- பிரிவு 4A இன் அடிப்படையில் பிரியங்கா பெர்னாண்டோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதுடன் 2000 பவுண்கள் அபராதமும் மற்றும் குறித்த  வழக்கிற்கான செலவீனங்களை வழங்கும் படியும் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்நிலையிலேயே பிரியங்கா பெர்ணான்டோவுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மேற்படி தீர்ப்பினை எதிர்த்து இலங்கை அரசு மேன்முறையீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ள, குறித்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு நியாயத்திற்கான வழக்கை முன்னெடுத்த சட்ட ஆலோசகரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம், இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிவிப்புக்கு அமைவாக பிரியங்கா பெர்னாண்டோ மேன்முறையீடு செய்துள்ள போதிலும் அவருக்கு தோல்வியே ஏற்படும் என  கூறியுள்ளார்.

குறித்த ‘உரிமை’ மின்னிதழிற்கு அவர் வழங்கியுள்ள செவ்வியின் முழுவடிவம் பின்வருமாறு

கேள்வி :- பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான வழக்கில் உங்களின் அனுபவத்தினை சுருக்கமாக கூறுங்கள்

பதில் :- பிரித்தானியாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான கிரிமினல் வழக்கை பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும்  இனப்படுகொலையை தடுப்பதற்கும் அதற்கு எதிரான சட்ட நடவடிக்கைக்குமான சர்வதேச மையத்தின் சார்பிலும் (ICPPG) வழிநடத்தும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது.

கடந்த 04 பெப்ரவரி 2018 அன்று இலங்கை சுதந்திர தினத்துக்கு எதிராக சட்ட நியமங்களுக்கு உட்பட்ட வகையில் அகிம்சை வழியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசியல் செயற்பாட்டாளர்களை நோக்கி இராணுவ உடையில் இருந்த பிரிங்க பெர்ணான்டோ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை தனது கைத்தொலை பேசியில் படம்பிடித்த பின்னர் கழுத்தை அறுப்பது போன்ற சைகையை மூன்று தடவைகள் காண்பித்து அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இதனால் அச்சமுற்ற பலர் என்னிடமும் ICPPG யிடமும் பாதுகாப்பு தேடி சட்ட ஆலோசனை பெற்றிருந்தனர். அவர்களை பொலீசாரிடம் முறைப்பாடு செய்யும்படி ஆலோசனை வழங்கியிருந்தோம். ஆனால், பிரியங்க பெர்னாண்டோவுக்கு இராஐதந்திர பாதுகாப்பு இருப்பதால் இதனை தம்மால் கையாளமுடியாது என்று பொலீசார் மறுத்திருந்தனர். அதேநேரம் பிரியங்க பெர்னாண்டோவின் இராஜதந்திர பாதுகாப்பை நீங்கி பொலிஸ் விசாரணைக்கு உதவும்படி வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகத்திற்கு (FCO) அனைத்து தமிழ் அமைப்புக்களும் கையொழுத்து இட்ட மனு சமர்ப்பித்தோம்.

இதனால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். பொலீசார் இலங்கை தூதுவராலயத்துடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் பிரியங்கவை விசாரணைக்கு அனுப்ப மறுத்தனர். வேறுவழியின்றி ICPPG அமைப்பின் பணிப்பாளர்களில் ஒருவர் என்ற அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் மூன்று முறைப்பாட்டாளர்களை தெரிவு செய்து தனியார் வழக்கு (Private Prosecution) ஒன்றை NMH Solicitors மூலமாக வெஸ்மினிஸ்டர் நீதவான் நீதிமன்றில் தொடர்ந்தோம்.

இதற்கிடையில் பிரியங்கவை காப்பாறும் நோக்கில் இலங்கை ஐனாதிபதியின் நேரடி உத்தரவால் மீள பணிக்கு அமர்த்தப்பட்டார். ஆயினும் பின்னர் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) போன்ற சில அமைப்புக்களுடன் நடந்த இரகசிய பேச்சுவார்த்தைகள் அடிப்படையில் அவர் பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைக்கப்பட்டார்.

அதன்பின்னர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து அவருக்கான அழைப்பாணையை விடுத்திருந்தது. அதற்கு அவர் பதிலளிக்காத காரணத்தால் வழக்கு பிற்போடப்பட்டு மீண்டும் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இந்த தடவை நீதிமன்றால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் (Process Server) மூலம் இலங்கையில் உள்ள அவரின் வீட்டுக்கும் இலங்கை தூதரகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதுமட்டுமன்றி முகப்புத்தகம் மூலமும் அனுப்பிவைக்கப்பட்டது.

இவற்றுக்கு பின்னரும் நீதிமன்றை அவமதிக்கும் முகமாக அவர் அழைப்பாணையை புறக்கணித்திருந்தார். இதானல் வேறுவழியின்றி அவர் இல்லாமல் (Trial in Absentia) முதல்கட்ட வழக்கு நடைபெறவேண்டிய நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வாதாட Public Interest Law Center ஐ சேர்ந்த சட்டத்தரணிகளாக Paul Heron மற்றும் Helen Mowat அவர்களையும் வழங்குரைஞராக Shanthi Sivakumaran உட்பட ஒரு குழு ஆஜராகியிருந்தோம். 

மூன்று நீதிபதிகள் அடங்கிய குழுவால் தீர்க்க ஆராயப்பட்ட பின்னர், பிரியங்க பெர்னாண்டோ மீதான மூன்று குற்றச்சாட்டுகளில் இரண்டு நிரூபிக்கப்பட்டு அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அவர்மீது பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.

பிடியாணையால் அதிர்ச்சியடைந்த இலங்கை அரசு தனது கடுமையான மறுப்பை தெரிவித்திருந்ததுடன், பிரித்தானிய தூதுவரையும் உடன் அழைத்து கலந்துரையாடியது. அதன்பிரகாரம் FCO மீது அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு அவர்கள் நீதிபதியை தொடர்புகொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டனர். அழைப்பாணை கிடைக்கவில்லை மற்றும் பிரியங்க இராஜ தந்திர பாதுகாப்புக்கு உட்பட்டவர் என்ற வாதங்களின் அடிப்படையில் பிடியாணை ரத்து செய்யப்பட்டது.

எனினும் எமது வேண்டுகோளுக்கு இணங்க வழக்கு தலைமை நீதிபதி Emma Arbuthnot முன்னிலையில் மீள எடுத்துக்கொள்ளப்பட்டது. இரண்டாம் கட்ட வழக்கின்போது பிரியங்க சமூகமளிக்கவில்லை ஆனால் தனது சார்பில் வழக்கறிஞரை நியமித்திருந்தார்.

எமது தரப்பை தலைமை தாங்க  Peter Carter QC அவர்களை நியமித்தோம். பிரியங்க தரப்பு வழக்குரைஞர் இந்த வழக்கை எம்மை கைவிட செய்யும் நோக்கில் பல தடவைகள் மீண்டும் மீண்டும் பிற்போட்டு இழுத்து அடிக்கும் முயற்சியில் இறங்கினார். அவர்களின் அனைத்து கோரிக்கைகளிக்கும் இடமளித்த தலைமை நீதிபதி, குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து வழக்கை மீளவிசாரிக்க அனுமதித்தார்.

மீள்விசாரணையின் போது, முதல்கட்டமாக பிரிகேடியரின் இராஜதந்திர பாதுகாப்பு பற்றிவாதிக்கப்பட்டது. சம்பவம் நடைபெற்ற தினம் அவருக்கு இராஐ தந்திர பாதுகாப்பு இருந்தால் அவர்மீது வழக்கு தொடரமுடியாது என்றும் அவர் தனது உத்தியோகபூர்வ கடமையையே செய்ததாக வாதிட்ட வழக்கறிஞர் அதற்கு ஆதாரமாக பிரியங்கவின் பணிவிவரம் (Job Describtion) என்ற ஆவணத்தையும் சமர்ப்பித்திரிந்தார்.

அதில் இருந்த தகவல்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தன. பிரிங்க போன்ற அதிகாரிகள் பிரித்தானியாவில் உள்ள தமிழர் செயற்பாடுகளை உளவு பார்த்து இலங்கை புலனாய்வு பிரிவுக்கு அனுப்பும் அதிர்ச்சிகரமான தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. எனினும் நீதிபதி, இராஜ தந்திர பாதுகாப்பு பணிநிலையின்போது மட்டுமே செல்லுபடியாகும் என்றும், பணியில் இருந்து அகற்றபட்டன பின்னர் வழக்கு தொடரலாம் என்றும், கழுத்துவெட்டும் சைகை உத்தியோக பணிகளில் அடங்காது என்றும் தீர்ப்பளித்தார். பின்னர் சாட்சிகள் இரண்டு நாட்கள் கடும் குறுக்குவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பிரியங்க சார்பில் சாட்சியமளிக்க வந்த முன்னாள் இராஜதந்திரி சேர். பீட்டர் ஹீப், ஆர்ப்பாட்டகாரர்கள் விடுதலைப்புலிகளின் கொடியை அசைத்ததாலேயே பிரியங்க ஆத்திரமுற்று இப்படி செயற்பட்டிருக்கலாம் என்று சொல்ல முற்பட்டார். ஆனாலும் எமது தரப்பு அவர் சொல்வது உண்மையல்ல அவர்கள் வைத்திருந்தது தமிழீழ தேசிய கொடியே தவிர விடுதலைப்புலிகளின் கொடி அல்ல என்ற நிரூபித்த பின்னர் தான் சொன்னது தவறு என்று மன்னிப்பு கோரினார்.

அதேபோல இப்படியான சைகை காண்பிப்பது உத்தியோக பூர்வ கடமையில் அடங்குமா”என நீதிபதி கேட்டபோது அவர் “இல்லை” என்றும் உறுதிப்படுத்தினார். இறுதியில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டு, 06 டிசம்பர் 2019 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

Public Order Act 1986 இன் பிரிவு 4 A இன் பிரகாரம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. அத்துடன் £2000.00 அபராதமும் நட்ட ஈடாக £350.00, செலவீனமாக £1,824.00 மற்றும் கட்டணமாக £170.00 உட்பட மொத்தமாக £4,344.00 செலுத்தும்படியும் உத்தரவிடப்பட்டது.

இது மட்டுமன்றி, இது இராஜதந்திரிகளை நியமிக்கும் விடயத்தில் இலங்கைக்கு ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்ற தொனியிலும் கருத்துதெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு எமக்கு ஏராளமான புது அனுபங்களை தந்துள்ளது மட்டுமன்றி பாரிய அதிர்வலைகளையும் இலங்கை மட்டுமன்றி சர்தேச மட்டத்திலும் ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி:- இந்த வழக்கில்  வழங்கப்பட்ட தீர்ப்பு எவ்வாறான நம்பிக்கையை அளிப்பதாக உள்ளது?   

பதில்:  இது ஒரு சிறு வெற்றியாக இருந்தாலும், தமிழ் இனத்துக்கு பெருநம்பிக்கையை வழங்கியுள்ள ஒரு விடயமாகும். 2009 இன் பின்னர் 10 வருடங்கள் கடந்தும் எந்தவழியிலும் எமக்கான நீதி கிடைக்காமல் தவித்து, படிப்படியாக நம்பிக்கை இழந்துவரும் வரும் எமது சமூகத்திக்கு இது ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்றாக அமைந்துள்ளது.

ஆயுத போராட்டம் மொளனித்த பின், அரசியல் தலைமகளும் சோரம்போன நிலையில் சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றே எமக்கான வழி என்பதையும் மீள வலியுறுத்துவதாக உள்ளது. அத்துடன் பல முரண்பாடுகள் மத்தியிலும் புலம்பெயர் தமிழ்மக்களையும் அமைப்புக்களையும் முதல் முறையாக ஒன்றிணையச் செய்த இந்த ஒரு விடயமாகவும் இது காணப்படுகிறது.

தமிழர்களாகிய எம்மால் சாதிக்க முடியும் என்பதை காட்டியுள்ளது. இராஜதந்திர பாதுகாப்பு காரணமாக எந்த ஒரு அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்ற மாயையை உடைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாடானது, உள்ளக பொறிமுறைகள் மூலம் எந்த நியாயமான தீர்வை வழங்கப்போவது இல்லை என்பதை ஆணித்தரமாக நிரூபித்துள்ளது.

தமிழருக்கு எதிரான ஒரு சிறு குற்றத்திற்கு கூட எந்த ஒரு இராணுவ அதிகாரியும் தண்டிக்கப்பட கூடாது என்பதில் வெறியுடன் செயற்படும் இலங்கை அரசு, போர்குற்ற விடயத்தில் என்றுமே நடுநிலையாக செயற்பட போவதில்லை என்பதை வலியுறுத்தி உள்ளதுடன் சர்வதேச சுயாதீன பொறிமுறைகளின் தேவைகளையும் மீள வலியுறுத்தி உள்ளது.

கேள்வி:- தீர்ப்பு நீதியாக அளிக்கப்பட்டாலும் இலங்கை அரசாங்கம் சவால் விடுக்கும் வகையில் அல்லவா தனது நிலைப்பாட்டை அறிவித்துள்ளதே!

பதில்:- தலைமை நீதிபதி தனது உரையின் போது,  பிரியங்க பெர்ணான்டோ இலங்கை அரசுக்கு இழுக்கை தேடித்தந்துள்ளார் என்றும் இவ்வாறான அதிகாரியை அரச பணிகளில் நியமிப்பதை மீளபரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தும், பிரித்தானிய நீதித்துறைக்கு சவால் விடும் முகமாக அவரை தற்போது Director of Real Estate & Quartering ஆக இலங்கை அரசு நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நிச்சயாமாக இரு நாட்டுக்குமான இராஜ தந்திர உறவில் சிறிய விரிசலை ஏற்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தியுள்ளது.

இவற்றுக்கு அப்பால், இந்த வழக்கானது சர்வதேச மட்டத்தில் பாரிய செல்வாக்கை செலுத்தும் என எதிர்பார்க்க்படுகிறது. பல நாடுகளில் பல இராஜதந்திரிகள் பலவிதமான குற்றங்களை புரிந்துவிட்டு இலகுவாக தப்பிவிடுகிறார்கள். அவர்கள் மீது எப்படியான குற்றங்களுக்கு எப்போது வழக்கு தொடரமுடியும் என்ற வழிகாட்டியாக இந்த வழக்கின் தீர்ப்பு திகழ இருக்கின்றது.

குறிப்பாக, பிரித்தானியாவில் அண்மையில் ஒரு அமெரிக்க இராஜதந்திரி  Harry Dunn என்ற 19 வயது சிறுவனை கார் விபத்தில் கொலை செய்துவிட்டு இராஜதந்திர பாதுகாப்பை காரணம்காட்டி அமெரிக்கா தப்பிச்சென்றுள்ளார்.

இந்த வழக்கின் தீர்ப்பு அடிப்படையில், இந்த நபர் மீண்டும் பிரித்தானியாவுக்கு அனுப்பபட்டு, நீதிவிசாரணைகளை எதிர்கொள்ள வைக்கப்பட ஏதுவான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறாக பல இராஜதந்திகள் தொடர்புபட்ட வழக்குகளில் இந்த தீர்ப்பு செல்வாக்கு செலுத்தவுள்ளது.

இவற்றைவிட பிரித்தானியா இராஜதந்திரிகள் நியமனத்திபோது பின்பற்றும் பரிசீலனை முறையை (Vetting Process) குறிப்பாக இலங்கை விடயத்தில் மீளாய்வு செய்யவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளது. பிரியங்க பெர்னாண்டோ போன்ற யுத்தக்குற்றவாளிகளும் அந்த நாட்டு சட்டத்தை மதிக்காதவர்களும் எவ்வாறு அனுமதிக்கப்பட்டார்கள் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

இவ்வாறு பலவகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு வெற்றியை தமிழர்கள் புரிந்துகொள்ளாமல் இருப்பதும் தமிழ் ஊடகங்கள் உரிய முக்கியத்துவம் வழங்காமல் இருப்பதும் மிகவும் வருத்தத்துக்கு உரிய விடயமாகும்.

இந்த வழக்கில் முறைப்பாட்டாளராகவும் சாட்சிகளாகவும்  துணிந்து நின்றவர்கள் நிச்சயம் பாராட்டப்படவேண்டியவர்கள். இப்படியான முயற்சிகள் பாராட்டப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் யுத்த குற்ற வழக்குகளை நாடாத்தி வெற்றிபெற ஊக்குவிப்பு கிடைக்கும். இது அவ்வாறான வெற்றிகளுக்கு முதல்படியாகும்.

கேள்வி:- இலங்கை வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பால் இத்தீர்ப்பினை எதிர்த்து மேன்முறையீடு செய்கின்ற போது மீள் விசாரணைக்கு உட்படுத்தப்படுமா ?

பதில்:- இலங்கை அரசின் வெளிவிவகார அமைச்சு இந்த வழக்கின் தீர்ப்பை வன்மையாக கண்டித்து ஒரு உத்தியோகபூர்வ அறிக்கை வெளியிட்டிருந்தது. அத்துடன் பல சட்ட விற்பன்னர்கள் கொண்ட குழு ஒன்றை பிரித்தானியாவுக்கு அனுப்பி இதற்கு எதிரான மேன்முறையீடு செய்வதை கற்ற ஆராய்ந்து இருந்தது.

அதன் பிரகாரம் பிரித்தானிய உயர் நீதிமன்றத்தில் ((High Court) இதனை விசாரணைக்கு எடுக்க அனுமதி கோரி நீதவான் நீதிமன்றுக்கு விண்ணப்பம் ஒன்றை தாக்கல் செய்துள்ளார்கள்.

பிரியங்க தனது இராஜ தந்திர கடமையில் இருந்த போதே, இந்த சைகை காட்டப்பட்டதால் அவர் மீது வழக்கு தொடரமுடியாது என்பது உட்பட ஏற்கனவே முன்வைக்கப்பட்ட அதே காரணங்கள் அடிப்படையிலேயே இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழமையாக இவ்வாறான தீர்ப்பை எதிர்த்து முடிக்குரிய நீதிமன்றிலேயே மேன்முறையீடு செய்வார்கள்.

அவ்வாறு செய்யும் பட்சத்தில் வழக்கு முழுமையாக மீளவிசாரணை செய்யப்படும். ஆனால் பிரியங்க தரப்பு வழமைக்கு மாறாக உயர் நீதிமன்றுக்கு மீளாய்வு (By way of case stated) விண்ணப்பம் செய்திருப்பதானது அவர்கள் பிரியங்க செய்த குற்றத்தை மறுக்க முடியாத போதும் தொழிநுட்ப வழிகளில் வெல்ல முயற்சிக்கும் பரிதாப நிலையையே காட்டுகிறது.

இந்த விடயங்கள் ஏற்கனவே இரு தடவை ஆழமாக ஆராயப்பட்டே தீர்ப்பு வழங்கப்பட்டதால் இதற்கு நீதவான் நீதிமன்று அனுமதி வழங்ககூடாது என்று எமது தரப்பு வாதத்தை நாம் எழுத்தில் சமர்ப்பித்துள்ளோம். இதை மீறி அனுமதி வழங்கப்பட்டு இந்த தீர்ப்பு உயர் நீதிமன்றில் ஆராயப்படும் பட்சத்திலும் மீண்டும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்களே அதிகம் உள்ளன. அத்துடன் உயர் நீதிமன்றினால் இந்த தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால் அது இன்னும் பலமான செல்வாக்கை எதிர்காலத்தில் செலுத்தும்.

நன்றி ‘உரிமை மின்னிதழ்’

Print Friendly, PDF & Email