SHARE

இலங்கை சோஷலிச குடியரசின் 72 ஆவது சுதந்திர தினத்தினை தமிழ் மக்களின் கரி நாள் என பிரகடணப்படுத்தி பிரித்தானியாவில் புலம்பெயர்தமிழர்களால் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் இன்று (செவ்வாய்கிழமை) நண்பகல் ஒன்று திரண்ட பெருமளவிலான புலம்பெயர்கள் தமிழர்கள் இலங்கை அரசிற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1956 ஆம் ஆண்டு இனக்கலவரம் முதல் கறுப்பு ஜூலை மற்றும் முள்ளிவாய்க்கால் என இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக தனது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைகளை தொடர்ந்தும் நடத்தி வருகின்றது. அந்தவகையில் இந்த சுதந்திர தினமானது அந்நாட்டிற்குள் வாழும் எல்லா இனத்தவர்களுக்குமானதல்ல என தெரிவித்து அவர்கள் மேற்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இம்முறை இடம்பெற்ற சுதந்திர நிகழ்வில் தமிழில் தேசியகீதம் பாடப்படாது என அரசாங்கம் அறிவித்திருந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை ராணுவத்தின் கைகளில் உயிருடன் ஒப்படைக்கப்பட்ட 20,000 இற்கும் மேற்பட்டவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்த கருத்திற்கும் இதன்போது எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

கடந்த 2018 ஆம் ஆண்டு 70 ஆவது சுதந்திர தின எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது இலங்கை தூதரகத்தின் அப்போதைய பாதுகாப்பு ஆதிகாரியாக இருந்த பிரியங்கா பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை பார்த்து கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email