SHARE

சர்வதேச நீதியை கோரி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்கு சர்வதேசம் தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள், “எமது உறவுகளின் நிலையை வெளிப்படுத்துமாறு கோரி ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அரசியல்வாதிகள் எமது பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்கு தவறியுள்ளனர். அந்த வகையில் சர்வதேச நீதியை கோரி நாம் போராடி வருகின்றோம்.

இன்று தமிழர்களிற்கு எதிராகவும் தமிழ்த் தேசியத்திற்கு எதிராகவும் பலர் பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழ்த் தேசியத்திற்காக பாடுபடுகின்ற கட்சிகளில் ஒட்டுக்குழுக்களாக இருந்தவர்களும் பயணிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர்.

தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பவர்களாக இருப்பவர்களையே நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இன்று வீடுவீடாக சென்று மக்களிடம் வாக்குகேட்கின்றார்கள். தமது பணிகளை சரியாக செய்திருந்தால் வீடுவீடாக செல்லவேண்டிய தேவை இல்லை.

எனவே யாரை நாடாளுமன்றம் அனுப்பவேண்டும் என்று மக்களுக்கு நன்கு தெரியும். எனவே எமக்கான நீதிக்கான வலுவினைச்சேர்க்க வேண்டும் என்று மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘எங்கள் உறவுகளுக்கான நீதி சர்வதேச நீதியாகவே வழங்கப்படவேண்டும்’, ‘வட-கிழக்கில் தமிழருக்கெதிராக இராணுவத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உடன் நிறுத்து’ போன்ற வசனங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை கைகளில் ஏந்தியிருந்ததுடன், கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

Print Friendly, PDF & Email