SHARE
இதயச்சந்திரன்
சிரேஷ்ட ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர்

இலங்கையின் மொத்த உள்ளூர் உற்பத்தியில் (GDP) 86.8 சதவீதம் கடன். வருகிற ஒக்டோபரில் 1 பில்லியன் டொலர் அரச பிணை முறியை (state sovereign bond)மீளச் செலுத்த வேண்டும்.

இந்த வருடம் மட்டும், செலுத்த வேண்டிய மொத்த கடன் ஏறத்தாள 2 இலட்சம் கோடி ரூபாய் . அதிலும் இந்தியாவிற்கு கொடுக்க வேண்டிய கடன் மீள் அளிப்புத் தொகை 960 மில்லியன் அமெரிக்க டொலர். கடனை சிறிது காலத்திற்கு உறைநிலையில் வைக்குமாறு இலங்கை விடுத்த கோரிக்கையை சில மாதங்களாக பரிசீலனையில் வைத்துள்ளது இந்தியா.

அத்துடன் திறைசேரியில் டொலர் நாணயம் குறைவடைந்த நிலையில், 1.1 பில்லியன் டொலர் பெறுமதிக்கு Currency Swap (இரு நாட்டு சொந்த நாணயப் பரிவர்த்தனை) ஒப்பந்தத்தை ஏற்படுத்த சனாதிபதி கோட்டாபாய இராஜபக்ச மேற்கொண்ட முயற்சியும் பலனளிக்கவில்லை. இருப்பினும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடம், முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கோட்டபாய விடுத்த வேண்டுதலுக்கு இன்னமும் பதிலில்லை.

அதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடனும் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது இலங்கை. ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் மற்றும் கொரோணாவினால் சகல வெளிநாட்டு வருவாயும் வீழ்ச்சியடைந்துள்ளது.

ஆகவே மேற்கும் இந்தியாவும் சற்று பின்வாங்கிய நிலையில் சீனாவின் புதிய அபிவிருத்தி வங்கியிலிருந்து 500 மில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கு கடந்த மே 13 அன்று உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

இந்தப் பொருளாதாரச் சிக்கலே, இராஜபக்சக்களின் இலங்கை குறித்தான புவிசார் அரசியலை நிர்ணயிக்கும் அல்லது வடிவமைக்கும் அகப் புறக் காரணிகளாக அமையப் போகிறது.
போரின் போது சகல வெளித்தரப்புகளையும் கையாண்ட அதே மூலோபாய உத்தியினை இனியும் கையாள்வது கடினம் என்பதனை கோட்டபாய ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தவுடன் உணர்ந்திருப்பார்.
இனி இலங்கைத் துறைமுகங்களை பங்கு போடும் வல்லரசுகளின் ஆட்டம் ஆரம்பமாகலாம்.

அதன் முதல் நகர்வாக கொழும்புத் துறைமுக கிழக்கு கொள்கலன் முனை குறிவைக்கப்படும். அடுத்தது திருக்கோணமலைத் துறைமுக மையம்.

Print Friendly, PDF & Email