SHARE

தேசிகன்

9 ஆவது பாராளுமன்ற தேர்தலைத் தொடர்ந்து தமிழ் தேசிய அரசியல் பரப்பில் தமிழரசுக் கட்சியினுடைய தேசிய பட்டியல் தெரிவும், தமிழரசுக் கட்சியினுடைய உள் விவகாரங்களும் அத்துடன் சுமந்திரனுடைய பாராளுமன்றத் தெரிவும் பேசுபொருளாக அமைந்திருக்கின்றது.

தமிழரசுக் கட்சியினுடைய வாக்குவீதம் கணிசமான அளவு குறைந்ததன் காரணமாக ஒரே ஒரு தேசிய பட்டியல் மாத்திரமே அவர்களுக்கு கிடைத்திருந்தது. அதே சமயம் தமிழரசுக் கட்சியினுடைய தலைவர், செயலாளர் போன்றோர் தேல்வியடைந்துள்ளனர். அத்துடன், சசிகலா ரவிராஜ் தோற்கடிக்கப்பட்டுள்ளார்.

இது தவிர அம்பாறையில் தமிழ் மக்களுக்கான ஆசனம் பல முனைப் போட்டியின் காரணமாக இழக்கப்பட்டது. இவ்வாறான ஒரு சூழ்நிலையில் அந்த ஒரு தேசிய பட்டியலை யாருக்கு கொடுப்பது என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக் கட்சியினுடைய உயர்பீடம் ஆகியவை சேர்ந்து தீர்மானித்திருக்க முடியும்.

ஆனால், மாவை சேனாதிராஜாவுக்கு அந்த ஆசனம் கொடுக்கப்படக் கூடாது என்ற காரணத்தால் கட்சியின் தலைவரான அவருக்கே தெரியாமலும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்குத் தெரியாமலும் சுமந்திரன், சிறிதரன் மற்றும் தமிழரசுக் கட்சியினுடைய செயலாளர் துரைராஜசிங்கம் ஆகியோர் இணைந்து சம்பந்தனை வசப்படுத்தி அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கலையரசனுக்கு தேசிய பட்டியலுக்கு உரித்தான நாடாளுமன்ற உறுப்பினராக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்தனர்.

இந்த நடவடிக்கையானது தமிழரசுக் கட்சிக்குள் கடினமான இருமுனைப் போராட்டத்தை உருவாக்கி இருக்கின்றது. கட்சியினுடைய செயலாளரான துரைராஜசிங்கம், பேச்சாளரான சுமந்திரன், கட்சியின் தலைமைப்பதவியைக் குறிவைத்துக் காத்திருக்கும் சிறிதரன் ஆகியோர் சம்பந்தனின் ஆசீர்வாதத்துடன் தமிழரசுக் கட்சியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முனைப்பாக செயற்படுகின்றனர்.

அதேசமயம், தமிழரசுக் கட்சியினுயை யாழ்ப்பாண மாவட்டக் குழுவும் அவர்களுடன் இணைந்து செயற்படக் கூடிய பெரும்பாலான உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் தமிழரசுக் கட்சியானது தமது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என விரும்புகின்றார்கள்.
கடந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய முடியாது என்றும் பதிவு செய்தால் கட்சி தமது கையை விட்டு போய்விடும் என்றும் பெயரளவில் கூட்டமைப்பு இருப்பதுடன் தமிழரசுக் கட்சியின் பெயரும் சின்னமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்ய முடியாது என்று தொடர்ந்து மறுதலித்து வந்தனர்.

குறிப்பாக தமிழரசுக் கட்சித் தலைமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்டமைப்பாக இயங்குவதற்குப் பெருந்தடையாக இருந்து வந்துள்ளது. அப்படிப்பட்ட தமிழரசுக் கட்சியை இன்று அந்தக்கட்சியில் உள்ளவர்களே பிளவுபடுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். இப்பொழுது தமிழரசு கட்சி என்ற பெயரும் அதனுடைய வீட்டு சின்னமும் யாரிடம் இருக்கப் போகின்றது என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.

சிங்கள பௌத்த மேலாதிக்கவாத அரச பயங்கரவாதத்திலிருந்து தமிழ் மக்களைப் பாதுகாத்து தமிழ் மக்களின் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தி, தமிழர் தம் தேசியத்தை நீர்த்துப் போகச் செய்து, இலங்கை அரசாங்கத்தினுடைய பாதுகாவலர்களாக செயற்பட்டு வருகின்ற சம்பந்தன், சுமந்திரன் போன்றோருடன் அவர்களின் நிழலாகச் செயற்பட்டுவரும் சிறிதரன் மற்றும் துரைராஜசிங்கம் முதலானவர்களின் கைகளில் தமிழரசுக் கட்சி போகப் போகின்றதா?

அல்லது தமிழின விடுதலை தொடர்பாக அவ்வப்போதாவது பேசுகின்றவரும் இளம்பிராயத்திலிருந்து தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலையுடன் பயணிப்பவரும், தேசியத்தலைவர் மேதகு பிரபாகரனின் நம்பிக்கையினை பெரிதும் பெற்றவரான மாவை சேனாதிராஜாவின் வசம் தமிழரசுக் கட்சி வரப்போகின்றதா?
இதற்கான போராட்டம் தற்போது ஆரம்பமாகிவிட்டது. களத்தில் இருஎஅணிகளாய் பிரிந்து நின்று ஆட்பிடிப்புக்கள் ஆரம்பமாகி விட்டன. இரகசிய சந்திப்புக்களும், திரைமறைவு திட்டங்களும் அரங்கேறிவருகின்றன. கட்சியின் தலைமையை பகிரங்கமாக விமர்சிக்கும் அளவிற்கு சுமந்திரன், சிறிதரன் இணையும் அவர்கள் தரப்பும் சென்றுவிட்டது.

தமிழரசுக்கட்சியைப் பொறுத்தவரையில் சிவகரன், அனந்திசசிதரன் உள்ளிட்டவர்கள் மீது கட்சிக்கு எதிராகப் பேசினார்கள் என்று ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருந்த அனுபவங்களைக் கொண்டிருக்கின்றது. விடுதலைப்புலிகளுக்கு எதிராக பேசினார் என்று ஆனந்த சங்கரியை கூட்டமைப்பிலிருந்து நீக்கிய அனுபவமும் காணப்படுகின்றது.

இந்த அனுபவங்களைக் கொண்டிருந்தாலும் சிறிதரன், சுமந்திரன் விடயத்தில் மாவை அடக்கியே வாசிக்கின்றார். அதுமட்டுமன்றி சுமந்திரன் மீது நிருவாகச் செயலாளர் குலநாயகம் நடவடிக்கை எடுக்குமாறு எழுத்துமூல கோரிக்கையை விடுத்தும் இன்னமும் அமைதி காக்கின்றார்.

தவறு விட்டோர் மீது தலைமை நடவடிக்கை எடுக்கத் தயங்கி வருகின்றமையானது, இன்று தந்தை செல்வா உருவாக்கிய கட்சியையே அவரது அடிப்படை சிந்தனைகளுக்கு எதிராக செயற்படும் ஒரு குழுவானது கட்சியை தன்வசம் எடுத்துக் கொள்ளும் ஒரு கடுமையான நிலை தோன்றியிருக்கின்றது.
தமிழரசுக் கட்சியினுடைய தலைமையின் பலவீனமான செயற்பாடுகளே இதற்கான காரணமாகின்றது. கடந்த காலத்தில் தவறுகள் நடைபெற்ற பொழுது மாவையும் அவர்களுடன் இணைந்தே அதற்கான சூத்திரதாரியாக இருந்தார். இன்று அவரையே திரும்பி தாக்கும் அளவுக்கு கட்சிக்குள் நிலைமைகள் மோசமடைந்திருக்கின்றன.

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆயுதப் போராட்டம் 2009 இல் மௌனிக்கச் செய்யப்பட்ட தருணத்தில் தமிழரசுக் கட்சியின் இருப்பை தமிழ் மக்களின் நலன்சார்ந்து அனறிருந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியினரே காப்பாற்றினர். பங்காளிகள் ஆதரவளித்து தமிழரசுக் கட்சியின் பதிவைக் காப்பாற்றி இருக்காவிட்டால் இன்று அந்த கட்சி செயற்பட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

அப்படியிருக்க தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பில் இவ்வளவு தூரம் பொதுவெளியில் வந்து கூச்சல் போடும் சுமந்திரனும் சம்பந்தரும் மக்களின் ஆணையைத் துச்சமென மதித்து தன்னிச்சையாக முடிவெடுத்து மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபடுகின்றபோதும் அதனையெதிர்த்து குரல் கொடுக்க முன்வராதது நிலையிலேயே தற்போதைய பங்காளிக்கட்சிகள் இருக்கின்றன.

அதேநேரம் 15 ஆம் திகதியன்று திருமலையில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் சுமார் 45 நிமிடங்கள் வரையில் மாவை.சோனதிராஜா தனது நிலைப்பாட்டை தெரிவித்தார். அதற்கு அரசியல் குழு தலைவரோ அல்லது சம்பந்தனோ, தேசியப்பட்டியல் ஆசனத்திற்கான அறிவிப்பைச் சம்பந்தன்,சுமந்திரன் ஆலோசனையில் செய்த பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கமோ சிலாகித்திருக்கவே இல்லை. வழமையைப் போன்றே மத்திய குழுவில் பார்க்கலாம் என்று மாவைக்கு தடாலடியாக தலையில் அடிக்கப்பட்டுவிட்டது.

அதுமட்டுமன்றி கட்சிப்பின்னடைவுக்கான காரணம் தேடல், சுயாதீனக்குழு நியமனம், அம்பாறைக்கு ஆசனம் வழங்கியமை சரி, முறையே தவறு என்று வேறொரு திசைக்கு விடயங்கள் சென்றாகிவிட்டன. மாவையால் வெட்டொன்று துண்டு இரண்டாக பேசமுடிந்திருக்கவில்லை. இந்நிலையில் மத்திய குழு கூட்டத்தில் மாவை என்ன செய்யப்போகின்றார்.

தலைமையின் அறிவுத்தலின்றி முறைதவறி, விதிமுறைகள் கடந்த பொதுச்செயலாளரை மாற்றுவாரா? இதற்கு பக்கபலமாக இருந்த சுமந்திரனின் முக்கிய பொறுப்புக்களை மீளப்பெறுவரா? பதவி நிலை மாற்றங்களுடன் முறையான மறுசீரமைப்பொன்றை கட்சிக்குள் மேற்கொள்வதற்கான தீர்மானங்களையேனும் எடுப்பாரா? ஆக மொத்தத்தில் மாவையின் தலைமையில் தமிழரசுக் கட்சி தப்புமா? தவறுமா?

Print Friendly, PDF & Email