SHARE

விமல் வீரவன்ச கூறுவதைப் போல தமிழ் தேசியம் தோற்றுவிடவில்லை என வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் தமிழ் தேசிய அரசியலை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டோம் என தென்னிலங்கையில் சில அரசியல்வாதிகளால் கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து இன்று (புதன்கிழமை) யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தைப் பொறுத்தவரை தமிழ் தேசியம் எந்த வகையிலும் பின்னடைவைச் சந்திக்கவில்லை. தமிழ் தேசியம் அதே நிலையில்தான் இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த ஒரு உறுப்பினரும் என எல்லாருமே தமிழ் தேசியத்தை சேர்ந்தவர்கள்தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

அப்படிப் பார்த்தால் ஆட்கள் மாறி இருக்கிறார்களே தவிர கோட்பாடுகள் அல்லது தமிழ் தேசியம் மாறவில்லை. எங்களை விட்டுப் பிரிந்து செல்லவில்லை. ஏதோவொரு வகையிலே தேர்தல் காலத்தில் சில விடயங்கள் நடைபெற்றிருக்கின்றன. சில இடங்களில் மூலை முடுக்குகளில் சிலர் வாக்கு வங்கியினை சேகரித்துள்ளார்கள்.

அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால், அதுவே எங்களுடைய அரசியலாக இருக்க முடியாது. ஆகவே நாங்கள் தொடர்ந்தும் தமிழ் தேசியம் சார்ந்து எல்லாரும் போராடுவோம். விமல் வீரவன்ச கூறுவதைப்போல எமது தமிழ் தேசியம் தோற்றுவிட்டது அல்லது தோற்கடித்து விட்டோம் எனக் கூறுவது தவறான விடயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Print Friendly, PDF & Email