SHARE

தமிழ் மக்கள் அரசியல் இலக்குகளில் ஆர்வத்தை இழந்துவிட்டார்கள் என்றும் பொருளாதார சலுகைகளையே அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துவரும் கருத்துக்களை மிகவும் லாவகமாக கையாண்டு பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (ஆங்கிலத்தில்) உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான நீதியரசர் விக்னேஸ்வரன், நீங்கள் சொல்வது உண்மையானால் “
வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு வேண்டும் என்பதுதொடர்பில் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் நடத்துவதற்கு அரசாங்கத்துக்கு இதுதான் சரியான சந்தர்ப்பம் ” என்று கோரிக்கை விடுத்தார்.

இடைக்காலக் கணக்கறிக்கை பற்றிய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்த விக்னேஸ்வரன், ”  ஒற்றை ஆட்சியின் கீழ் பொருளாதார நலன்கள் மட்டுமே அவர்களுக்கு வேண்டும் என்று மக்கள் தீர்மானித்தால் நான் அரசியலில் இருந்து உடனே விலகி விடுவேன். இல்லையென்றால், எமது தலைவர்கள் புதிதாகச் சிந்தித்து அரசியல் மேதகைப் பண்புகளுக்குரிய முடிவுகளை எடுத்து எமது இனப்பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். ஆகவே, ‘எமக்கான அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் தாருங்கள். நாம் ஏனையோருடன் இணைந்து இந்த நாட்டை அமைதியும் செழிப்பும் மிக்கதாக ஆக்குவோம்’ என்று கூறினார்.

நாட்டில் இனப்பிரச்சினை என்ற ஒன்றே இல்லை என்று ஜனாதிபதி மற்றும் அரசாங்க தரப்பினர் மேற்கொண்டுவரும் வாதங்களுக்கு தக்க பதிலடி கொடுத்த விக்னேஸ்வரன்,  “சுதந்திரத்துக்கு பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளுமே இனப்பிரச்சனை இருக்கின்றது என்பதை ஏற்றுக்கொண்டே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன.  சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டன.   யுத்த நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. நீண்ட கால இன முரண்பாட்டின் ஒரு இடை வெளிப்பாடாகவே விடுதலைப்புலிகள் தோன்றினார்கள். இன்று  விடுதலைப்புலிகள் இல்லை என்ற காரணத்துக்காக இனப்பிரச்சினை இல்லை என்று ஆகிவிடாது.” என்று நாட்டில் இனப்பிரச்சினைதான் இருக்கிறது என்று வாதிட்டார்.

Print Friendly, PDF & Email