SHARE

தேர்தல் காலங்களிலும் அதற்குபின்னரும் இணையத் தளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்சிக்கும் அதன் தலைமையின் மீதும் எதிராக பிரசாரங்களை மேற்கொண்ட உறுப்பினர்கள் மீது ஒழுங்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஆரம்பமாகி மாலையளவில் நிறைவுபெற்றது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கட்சியின் செயலாளர் துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.ஸ்ரீதரன் உட்பட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மத்திய செயற்குழுவின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவித்த கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, “இன்றைய கலந்துரையாடலில் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுகள் பற்றி ஆராய்ந்திருந்தோம்.

ஒவ்வொருவரும் தமது பகுதிகளில் கட்சியின் வீழ்ச்சிக்கு ஏற்பட்ட காரணம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தார்கள். எனவே அந்த விடயத்தில் ஏற்பட்ட பின்னடைவு தொடர்பாக ஆராய்ந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்குமாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒரு குழு விரைவில் அமைக்கப்படும்.

அத்துடன், கட்சியின் தேசியப் பட்டியல் நியமனம் தொடர்பாக தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. அந்த தேசியல் பட்டியல் ஆசனம் தலைவரது அனுமதி பெறாமல் செயலாளரால் தேர்தல் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டமை தவறானது என்றும் இருப்பினும் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட நியமனம் சரி என்றும், அது தொடரவேண்டும் என்றும் மத்திய குழுவால் தீர்மானிக்கப்பட்டது.

அந்த தீர்மானம் விதிமுறைகளிற்கு மாறானது என்பதை தீர்மானித்துள்ளோம். அது தொடர்பாக மேலும் தீர்மானங்கள் எடுக்கவேண்டுமாக இருந்தால் அடுத்த செயற்குழு அது தொடர்பாக தீர்மானிக்கும்.

அத்துடன், தேர்தல் காலங்களிலும் அதற்குக் பின்னரும் இணையத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் எதிராக மேற்கொள்ளப்பட்ட பிரசாரங்கள் தொடர்பாகவும் ஊடகங்களில் பகிரங்கமான கருத்துக்களை வெளியிட்ட உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுங்கு நடவடிக்கை ஒன்றை எடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்காக ஒரு குழுவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.

அத்துடன், 2020 தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்ட அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள், ஏனைய நடவடிக்கைகள், மக்களின் தேவைகளை நிறைவேற்றுதல் தொடர்பாகவும் தேசிய மாநாட்டை நடத்துவது குறித்தும் அடுத்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

மேலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கொரடா விவகாரம் தொடர்பாக இன்று நாம் எதனையும் பேசவில்லை. கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அந்த விடயம் தொடர்பாக தீர்மானிப்பார்கள். தேவைப்பட்டால் நாங்களும், கூட்டமைப்பின் தலைவர்களுடன் பேசுவோம்.

எமது கட்சியின் மகளீர் அணியைச் சேர்ந்த பெண்மணி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கட்சியின் தலைவரது வழிகாட்டலின்படி செயலாளர் அவரை பதவியிலிருந்து இடைநிறுத்தியுள்ளார். அவர் மீது சுமத்தப்படும் குற்றங்கள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு நடவடிக்கை எடுக்கும் எனத் தீர்மானித்துள்ளது.

இதேவேளை, ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு மாகாண சபையில் கூட்டமைப்பின் ஊடாக ஆசனம் வழங்குவீர்களா என கேட்டபோது, இவ்விடயம் தொடர்பாக நாம் எதனையும் இன்று கதைக்கவில்லை. அதற்கான நேரமும் போதுமானதாக இருக்கவில்லை” என்று தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email