SHARE

“தமிழினத்தின் ஒன்றுபடலும், சர்வதேசத்தின் தலையீடுமே நீதியை பெறுவதற்கு வழிசமைக்கும்”

சுதர்சினி

தமிழர் தாயகத்தில், முன்னெடுக்கப்பட்ட தமிழின விடுதலைக்கான பயணத்தின்போது சிறிலங்கா இராணுவத்தினரால் திட்டமிட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது வரையில் உறுதிப்படுத்தப்பட்டதாக இல்லை.

அவ்வாறிருக்க, தங்களது, பிள்ளைகள், கணவர், சகோதரர் என்று அன்புக்குரியவர்களை தொலைத்து விட்டு ஆண்டுகள் பல கடந்தும் அல்லல்களுக்கு மத்தியில் சிறிலங்காத் தீவு முழுவதும் தேடியலைந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்களின் சொந்தங்கள். ஆனால் தற்போது வரையில் அன்புக்குரியவர்களை தேடி அலைந்து கொண்டிருக்கும் உறவுகளுக்கு கிடைத்தது வெறும் ஏமாற்றமே.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய வெற்றி பெற்றதும், அதன் பின்னர் ஆகஸ்ட் ஐந்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ராஜபக்ஷவினரின் ஆட்சிக்கு மூன்றிலிரண்டு பலத்தினை பெருந்தேசிய வாதிகள் அளித்துள்ளமையும் நீதிக்கான போராட்டத்தினை முற்றுமுழுதாக முடக்கும் நிலைமையே ஏற்பட்டிருக்கின்றது.

இத்தகையதொரு பின்னணியில் வழமை போலமே சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான தினம் இம்மாதம் 30ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இத்தினைத்தில் வடக்கு கிழக்கில் தனித்தனியாக இரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்களை மேற்கொள்வதற்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கான அறிவிப்பினை அந்த உறவுகள் பகிரங்கமாக தெரிவித்துள்ளதோடு அதற்காக பேதமின்றி அனைத்து தரப்புக்களையும் ஆதரவு நல்குமாறு கோரிநிற்கின்றார்கள். அரசியல் ரீதியாக பிரிந்து நிற்கும் தரப்புக்களும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை பிளவு படுத்தி வைத்திருக்கும் தரப்புக்களும் இந்த உறவுகளின் பகிரங்க கோரிக்கையை ஏற்று ஓரணியில் திரள்வார்களா என்ற வினா இங்கு மேலெழுகின்றது.

அதுமட்டுமன்றி, கடந்த மே மாதம் 18ஆம் திகதி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முறையாக அனுஷ்டிக்கவிடாது பல்வேறு முட்டுக்கட்டைகளை ஏற்படுத்தி சிறிலங்கா படைகளும், புலனாய்வாளர்களும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டத்தினை சுதந்திரமாக மேற்கொள்வதற்கு நிச்சயமாக இடமளிக்க மாட்டார்கள்.

அதற்கு கட்டியங்கூறும் நடவடிக்கையாகவே அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் அலுவலகத்தின் பெயர்பலகையை தகர்த்து, அதில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட சங்கத்தின் தலைவிக்கு எச்சரிக்கை பிரசுரமும் ஒட்டப்பட்டிருக்கின்றது.

இதையொத்த நிலைமைகள், அல்லது இதனைவிடவும் கடுமையான நிலைமைகளே முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் இருக்கப்போகின்றது என்பதை தற்போதே உய்த்தறிந்துவிட முடிகின்றது. அதேநேரம், யாழிலும், மன்னாரிலும், மட்டக்களப்பிலும், திருகோணமலையிலும், வவுனியாவிலும், கெடுபிடிகள் இருக்காது என்று சொல்வதற்கில்லை.

ஆனால் அத்தனை கெடுப்பிடிகளையும் தாண்டி தமது அன்புக்குரிய சொந்தங்களை கண்டுபிடித்து தருமாறு உறவுகள் வலியுறுத்துவதில் பின்நிற்கப்போவதில்லை. சுற்றிவளைப்பின் பேராலும், விசாரணைகளின் பேராலும் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் ஆயிரமாயிரம்பேர். இதனை விடவும், சரணடைந்தவர்கள், சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டவர்கள் என்று பட்டியல் நீண்டு செல்கின்றது.

இவர்கள் அனைவருக்கும் என்ன நடந்தது என்பதே தற்போது அவர்களின் உறவினர்களின் கோரிக்கையாக இருக்கின்றது. சிறில்ங்காவை மாறிமாறி ஆட்சி செய்த அனைத்து தலைவர்களும் இதற்கான பதிலை வழங்க வேண்டிய பொறுப்பிலிருந்து விலகி நிற்க முடியாது என்பது வெளிப்படையான விடயம்.

அதிலும், குறிப்பாக, 2005ஆம் ஆண்டு ஆட்சிப்பீடமேறிய ராஜபக்ஷவினர் இந்த விடயத்தினை தட்டிக் கழிக்கவே முடியாது. ஜனாதிபதியாக மஹிந்தவும், பாதுகாப்புச் செயலாளராக கோத்தாபயவும் இருந்த சந்தர்ப்பத்திலேயே அதிகளவு காணாமலாக்கப்பட்ட சம்பங்கள் அரங்கேறின. வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றன.

சிறிலங்கா படைகளிடத்தில் நேரடியாக சரணடைந்தவர்கள் இருகின்றார்கள். ஆனால் இவர்களுக்கு எல்லாம் என்ன நடந்தது என்று பகிரங்கமாக கோருகின்றபோது ராஜபக்ஷ அரசு சினமடைகிறது. கேள்வி கேட்பவர்களையும், கவனயீர்ப்புக்களை செய்கின்றவர்களையும் நசுக்க முனைகின்றதே தவிர உரிய பதில் அளிப்பதற்கு திராணியில்லாத நிலையிலேயே உள்ளது.

தற்போது பாதுகாப்புச்செயலாளர் ஜனாதிபதி ஆசனத்திலும், ஜனாதிபதி பிரதமர் ஆசனத்திலும் இருக்கின்ற நிலையில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான உரிய பதிலளிக்க வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு இருக்கின்றது. இதிலிருந்து அவர்கள் விலகி நின்றுவிட முடியாது.

எனினும், ராஜபக்ஷ சகோதரர்கள் இந்த விடயத்தினை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதற்கே விரும்பாத நிலையில் காணாமலாக்கப்பட்டவர்களை தேடி அலையும் சொந்தங்களை வீடுகளுக்குள் முடக்கி காணாமலாக்கப்பட்டவர்களுக்கான மரணச் சான்றுதழை திணித்து தப்பி பிழைத்துக் கொள்ளவே திட்டம் தீட்டி வருகின்றன.

அதாவது, இறுதிப்போரினை வழிநடத்தி சரணடைந்தவர்கள் உட்பட பல் ஆயிரக்கணக்கானவர்கள் காணாமல் போவதற்கு ஆணிவேராக இருக்கும் ராஜபக்ஷவினர் சகலதையும் மறந்து முன்னோக்கி செல்வோம் என்றும், தென்னிலங்கையிலும் பலர் காணாமலாக்கப்பட்டனர் என்று பிடிச்சிராவித்தன நியாயம் கற்பிக்க விளைகின்றனர். அத்துடன் தங்களுடைய பொறுப்பினை தட்டிக்கழித்து “பொறுப்பு துறப்பினை” செய்யவே முனைகின்றனர்.

சிறிலங்காவைப் பொறுத்தவரையில் அதுமட்டுமன்றி வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விடயத்திற்கு தீர்வளிப்பதற்கு காலம் கடத்துவதற்குரிய சூட்சுமங்களையே சிங்களத் தலைவர்கள் முன்னெடுப்பது வழமையானதொரு விடயமாகும்.

2004-இல் சந்திரிக்கா அம்மையாரால் அதிபர் செயலக ஆணைக்குழு உருவாக்கப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷவினால் 2011 இல் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, 2013-இல் பரணகம ஆணைக்குழு ஆகியன உருவாக்கப்பட்டன. பின்னர் மைத்திரி-ரணில் கூட்டு அரசில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம்,காணாலாக்கப்பட்ட உறவுகளின் எதிர்ப்பு மத்தியில் உருவாக்கப்பட்டது.

ஆனால் இவையாவும் சிங்கள சார்பு நிலை உள்ளக நீதி நிறுவனங்களாகச் செயற்பட்டனவே தவிரவும் உறவுகளைத தேடும் சொந்தங்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை,தற்போதைய சூழலில் அவை பெற்றுக்கொடுக்கப் போவதுமில்லை என்பது வெளிப்பட்டாகிவிட்டது.

ஆகவே நீதியைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரேவழியாக இருப்பது சர்வதேசத்தின் தலையீடாகும். அதுமட்டுமன்றி தமிழர் தயாகத்தில் இருக்கும் அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து அதற்கான வலியுறுத்தல்களை செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த சொந்தங்கள் அதற்குரிய உந்துதலையும், அழுத்தங்களையும் முறையாக பிரயோக்க வேண்டும்.

அதனை விடுத்து திட்டமிட்ட கால தாமதங்கள் ஊடாக உறவுகளை தேடுபவர்களை உடல் உள ரீதியாக பலவீனப்படுத்தி உயிரிழக்க வைக்கும் நிலைமைகளும் காணப்படுகின்றன. மேலும் தமிழ்த் தேசிய தளத்தில் உள்ள அரசியல் பிரதிநிதிகளின் செயற்பாடுகள் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவுசெய்யும் வகையில் காணப்படுவதாக இல்லை. தமது சுயலாப அரசியல் நலன்களுக்காக காணாமலாக்கப்படுபவர்களினது விடயத்தினை பயன்படுத்தப்படும் சூழலொன்று தோன்றியுள்ளது.

இந்த நிலைமை உடன் மாற்றமடைந்து அந்தப்பிரதிநிதிகள் பொறுப்புக்கூற வேண்டிய புதிய அரசாங்கத்தின் மீது பாரிய அழுத்தங்களை பிரயோகித்து சர்வதேசத்தின் பங்களிப்புடனான நீதிப்பொறிமுறையை உருவாக்க வேண்டும்.

இந்தச் செயற்பாடுகளில் ஏற்படும் தாமதங்களுக்கு ஒரே தீர்வாக இருப்பது சர்வதேச விசாரணையே ஆகும். ஆயினும் சர்வதேச, நாடுகளும், அமைப்புக்களும், நிறுவனங்களும், நாளாந்தம் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கும் சூழல் தோன்றுவதால் அவற்றின் மீதூன நம்பிக்கையும் படிப்படியாக குறையும் நிலையே ஏற்பட்டுள்ளது.

ஆகவே எந்தவிதமான தமதங்களும் இன்றி நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நீதி வழங்களில் ஏற்படும் தாமதங்கள் தமது அன்புக்குரியவர்களைத் தேடும் உறவுகளின் மரணத்திற்கு அடிப்படையாக அமையும். அதன் விளைவுகளும் புறக்கணிப்பும் தமிழ் இனத்தின் எதிர்கால சந்ததியின் அகிம்சை மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும்.

ஆகவே சர்வதேச சமூகத்தின் பிரசன்னத்தினுடனான விரைவான நீதிப்பொறிமுறை அமைக்கப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்காக போராடும் சொந்தங்களுக்கான நீதி வழக்கப்படவேண்டும். அவ்வாறில்லாத நிலைமை நீடிக்குமாயின் தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமனாகிவிடும்.

Print Friendly, PDF & Email